தூங்குக தூங்கிச் செயற்பால – குறள்: 672

தூங்குக தூங்கிச் செயற்பால

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.        –   
குறள்: 672

  – அதிகாரம்: வினை செயல்வகை, இயல்: அமைச்சியல், பால்: பொருள்

 

கலைஞர் உரை

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத்  தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மெல்லச் செய்ய வேண்டிய வினைகளை மெல்லச் செய்க; விரைந்து செய்ய வேண்டிய வினைகளை விரைந்து செய்க.

மு. வரதராசனார் உரை

காலந்தாழ்த்திச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தியே செய்யவேண்டும்; காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது.

G.U. Pope’s Translation

Slumber when sleepy work’s in hand; beware
Thou slumber not when action calls for sleepless care!

– Thiukkural 672,, The Method of Acting, Wealth

உதாரணம்

மண் பானையை செய்தவுடன், அந்த பானை காய்வதற்கு முன்பே அதில் தண்ணீர் ஊற்றி வைக்க முடியாது. பானை காயும் வரை காத்திருந்து, அதன் பின்னரே அதைச் சுட்டுப் பயன் படுத்த வேண்டும். மாறாக, ஆடி மாதம் விதைக்க வேண்டிய விதையைக் காலம் தாழ்த்தி, ஐப்பசி மாதத்தில், பருவ மழை பெய்யும் காலத்தில், விதைத்தால், விதைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும். இதனால் நமக்கு தீங்கு தான் ஏற்படும்.   ஆகவே, காலம் தாழ்த்த வேண்டிய செயலைத் தாழ்த்த வேண்டும்; காலம் தாழ்த்தாமல், விரைந்து செய்ய வேண்டிய செயல்களை விரைந்து உடனுக்குடன் முடிக்க வேண்டும்.  


உதாரணப்பட விளக்கம்

தக்க வேகத்தில் விரைந்து தாண்டினால் தான், அந்த விளையாட்டு வீரர், அந்த பள்ளத்தைத் தாண்ட முடியும். மெல்லமாக தாண்டினால், அவர், பள்ளத்தில் விழ நேரிடும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.