ஞாயிறு – பாரதிதாசன் கவிதை – அழகின் சிரிப்பு

ஞாயிறு - பாரதிதாசன் கவிதை

ஞாயிறு – அழகின் சிரிப்பு – பாரதிதாசன் கவிதை

எழுந்த ஞாயிறு!

ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்
தொருபொருள், வாராய்! நெஞ்சம்
களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்
கனல் பொருளே, ஆழ் நீரில்
வெளிப்பட எழுந்தாய்; ஓகோ
விண்ணெலாம் பொன்னை அள்ளித்
தெளிக்கின்றாய்; கடலில் பொங்கும்
திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய்.


வையத்தின் உணர்ச்சி

எழுந்தன உயிரின் கூட்டம்!
இருள் இல்லை அயர்வும் இல்லை!
எழுந்தன ஒளியே, எங்கும்!
எங்கணும் உணர்ச்சி வெள்ளம்
பொழிந்தநின் கதிர்ஒவ்வொன்றும்
பொலிந்தேறி மேற்றிசைமேல்
கொழுந்தோடக் கோடி வண்ணம்
கொழித்தது சுடர்க்கோமானே!


காட்சி ஞாயிறு

பொங்கியும் பொலிந்தும் நீண்ட
புதுப்பிடர் மயிர்சிலிர்க்கும்
சிங்கமே! வான வீதி
திகு திகு என எரிக்கும்
மங்காத தணல்பிழம்பே!
மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத்
தகளியில் பெருவிளக்கே!


ஒளிசெய்யும் பரிதி

கடலிலே கோடி கோடிக்
கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!
நெடுவானில் கோடி கோடி
நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ
இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅளாவ
அமைந்தனை! பரிதி வாழி!


கதிரும் இருளும்

என்னகாண் புதுமை! தங்க
இழையுடன் நூலை வைத்துப்
பின்னிய ஆடை, காற்றில்
பெயர்ந்தாடி அசைவதைப்போல்
நன்னீரில் கதிர் கலந்து
நளிர் கடல் நெளிதல் கண்டேன்;
உன்கதிர், இருட்பலாவை
உரித்தொளிச் சுளையூட்டிற்றே!


கறைபோக்கி எழில் செய்தாய்

இலகிய பனியின் முத்தை
இளங்கதிர்க் கையால் உண்பாய்!
அலை அலையாய் உமிழ்வாய்
அழகினை, ஒளியை யெல்லாம்!
இலைதொறும் ஈரம் காத்த
கறை போக்கி இயல்பு காப்பாய்!
மலையெலாம் சோலை எல்லாம்
நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்!


எங்கும் அது

தாமரை அரும்பில் எல்லாம்
சரித்தனை இதழ்கள் தம்மை
மாமரத் தளிர் அசைவில்
மணிப்பச்சை குலுங்கச் செய்தாய்!
ஆமாமாம் சேவற் கொண்டை
அதிலும் உன் அழகே காண்பேன்!
நீமன்னன்; ஒளியின் செல்வன்;
நிறை மக்கள் வாழ்த்தும் வெய்யோன்.


பரிதியும் செயலும்

இறகினில் உயிரை வைத்தாய்
எழுந்தன புட்கள்! மாதர்
அறஞ்செய்யும் திறஞ்செய்திட்டாய்
ஆடவர் குன்றத் தோளில்
உறைகின்றாய்! கன்று காலி
உயிர்பெறச் செய்கின்றாய்நீ!
மறத் தமிழ் மக்கள் வாழ்வில்
இன்பத்தை வைத்தாய் நீயே.


பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை

வாழும் நின் ஒளிதான் இன்றேல்
வானிலா உடுக்கள் எல்லாம்
தாழங்காய், கடுக்காய்கள்போல்
தழைவின்றி அழகிழக்கும்
பாழ் என்ற நிலையில் வாழ்வைப்
பயிரிட்ட உழவன் நீ; பைங்
கூழுக்கு வேரும் நீயே
குளிருக்குப் போர்வை நீயே!


ஞாயிறு வாழி

விழிப்பார்வை தடுத்து வீழ
விரிகின்ற ஒளியே, சோர்வை
ஒழிக்கின்ற உணர்வே, வையத்து
இருளினை ஒதுக்கித் தள்ளித்
தழற் பெரு வெள்ளந் தன்னைச்
சாய்ப்போயே, வெயிலில் ஆடித்
தழைக்கின்றோம் புதுஞாயிற்றுத்
தனிச் சொத்தே வாழி நன்றே.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.