உடல் நலம் காக்கும் சத்துமாவுக் கஞ்சி – செய்முறை – Health Mix Recipe

Health Mix

சத்துமாவுக் கஞ்சி (Health Mix) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் உகந்தது. இது நம் உடல் நலத்தைப் பேணிக் காக்கக் கூடிய சிறந்த உணவு.  இது பெயரில் உள்ளது போலவே, குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் / வலிமைக்கும், மற்றும் நம் அனைவரின் உடல் நலத்திற்கும் தேவையான வைட்டமின்கள் (Vitamins), புரதச் சத்து (Proteins) போன்ற சத்துக்களை உள்ளடக்கியது.

சத்துமாவு செய்யும் முறையையும், பின்பு அதைக் கொண்டு சத்துமாவுக் கஞ்சி செய்யும் முறையையும் பார்ப்போம்.

சத்துமாவு செய்யத் தேவையான பொருட்கள்

(குறிப்பு: கீழ்க்கண்ட பொருட்களின் அளவுகளை உங்கள் தேவைக்கேற்ப குறைக்கலாம்)

 • சிவப்பு அரிசி = 1/4 கிலோ கிராம்
 • வரகு அரிசி = 1/4 கிலோ கிராம்
 • கம்பு = 1/4 கிலோ கிராம்
 • சாமை = 1/4 கிலோ கிராம்
 • தினை = 1/4 கிலோ கிராம்
 • மூங்கில் அரிசி = 1/4 கிலோ கிராம்
 • கேரளா புழுங்கல் அரிசி = 1/4 கிலோ கிராம்
 • குதிரைவாலி = 1/4 கிலோ கிராம்
 • கேழ்வரகு = 1/4 கிலோ கிராம்
 • சம்பா கோதுமை = 1/4 கிலோ கிராம்
 • சோளம் (வெள்ளை, சிறியது) = 1/4 கிலோ கிராம்
 • மக்காச் சோளம் = 100 கிராம்
 • பச்சைப் பயறு (முழுசு) = 1/4 கிலோ கிராம்
 • மொச்சைக்கொட்டை = 100 கிராம்
 • வெள்ளை மூக்குக்கடலை (வெள்ளை கொண்டைக்கடலை) = 100 கிராம்
 • காராமணி = 100 கிராம்
 • கருப்பு முழு உளுந்து = 100 கிராம்
 • ராஜ்மா = 100 கிராம்
 • சோயா பீன்ஸ் = 100 கிராம்
 • முந்திரிப் பருப்பு = 50 கிராம் (உங்கள் தேவைக்கேற்ப இதைச் சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம்)
 • பாதாம் பருப்பு = 50 கிராம் (உங்கள் தேவைக்கேற்ப இதைச் சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம்)
 • வால்நட் (Walnut) = 50 கிராம் (உங்கள் தேவைக்கேற்ப இதைச் சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம்)
 • பிஸ்தா (Pistachio) = 50 கிராம் (உங்கள் தேவைக்கேற்ப இதைச் சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம்)

சத்துமாவு செய்யும் முறை

 1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை கற்கள் மற்றும் தூசி நீக்கிச் சுத்தம் செய்தபின், வெயிலில் காய வைத்து, மாவு அரைக்கும் எந்திரத்தில் (மாவு அரைக்கும் மில் / Flour Mill) கொடுத்து நன்றாக, மென்மையாக, அரைக்கவும். இதை மிக்சியில் அரைத்தால் நன்றாக மசியாது. அதனால் தான் மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
 2. அரைத்த மாவை ஒரு பெரிய தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
 3. மாவு ஆறிய பின், அதை ஒரு சேமிப்புக் கலனில் (Storage Container) நன்கு மூடி வைக்கவும். இந்த மாவு நீண்ட நாட்களுக்கு பயன்படும் என்பதால், இதைக் காற்று மற்றும் எறும்பு புகாதவாறு இறுக்கமாக மூடிப் பாதுகாப்பது அவசியம்.

சத்துமாவுக் கஞ்சி செய்யத் தேவையான பொருட்கள்

 • மேலே சொன்னபடி தயாரித்த சத்து மாவு = 50 கிராம்
 • உப்பு அல்லது சர்க்கரை = தேவையான அளவு
 • பால் = சுவைக்கு ஏற்றபடி; பால் சேர்ப்பதாக இருந்தால், அதில் உப்பு சேர்க்கக் கூடாது.

சத்துமாவுக் கஞ்சி செய்யும் முறை

 1. ஏற்கனவே நாம் செய்த சத்து மாவில் இருந்து 50 கிராம் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சிறிது தண்ணீர் ஊற்றிக்  கரைத்து, தனியாக வைக்கவும்.
 2. மற்றொரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
 3. முக்கிய குறிப்பு:  தண்ணீரைக் கொதிக்க விடக் கூடாது.  தண்ணீர் காய்ந்தவுடன், முன்பு கரைத்து வைத்த மாவை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். தண்ணீர் கொதித்தால், மாவு கட்டி கட்டியாக மிதக்கும். அதைத் தவிர்க்க, தண்ணீர் கொதிக்கத் தொடங்கும் முன், கரைத்த மாவு முழுவதையும் ஊற்றிக் கிளறி முடிக்க வேண்டும்.
 4. இப்போது, சத்துமாவுக் கஞ்சியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
 5.  சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதாக இருந்தால், இந்தக் கஞ்சியில் உப்பு போட்டுக் கலக்கவும்.
 6. தேவைப்பட்டால், சுவைக்கு ஏற்றபடி பால் சேர்த்துக் கொள்ளலாம். பால் சேர்ப்பதாக இருந்தால், பால் கஞ்சியில் உப்பு சேர்க்கக் கூடாது.

இதுவே சுவையான சத்துமாவுக் கஞ்சி செய்யும் முறை. 50 கிராம் மாவு கொண்டு தயாரிக்கும் சத்துமாவுக் கஞ்சி, 3 அல்லது 4 குவளை (Tumbler / Glass) அளவு இருக்கும். உங்கள் தேவைக்கேற்ப அதிக அளவு மாவு கொண்டு, சத்துமாவுக் கஞ்சி செய்யலாம்.

முக்கிய குறிப்பு: மழை நாட்களில், பச்சைப் பயறு, உளுந்து, கேழ்வரகு ஆகியவற்றைத் தவிர்க்கவும். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.