செல் என்றால் என்ன? (What is Cell?)

செல் என்றால் என்ன?
மனித உடல் கட்டமைப்பு பிரமிடு கோபுர வரைபடம்

செல் என்றால் என்ன? (What is Cell?) – உடலின் கட்டமைப்பு

செல் என்றால் என்ன? மனிதன் மற்றும் பிற உயிரிகளின் உடல்கள் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளன? இதற்கான விடையை இந்த “அறிவியல் அறிவோம்” பகுதியில் தெரிந்து கொள்வோம்!

ஒரு கட்டடம் பல சுவர்களால் ஆனது; ஒவ்வொரு சுவரும் பல ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான செங்கற்களால் ஆனது. கட்டடத்தின் அடிப்படை அதன் செங்கற்கள்.

அதுபோல், ஒரு உயிரி என்பது, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செல்களால் கட்டமைக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு உயிரிக்கும் அதன் அடிப்படை அதன் செல்லாகும்.

உலகில், ஒரு செல் மட்டுமே கொண்ட கண்ணுக்குப் புலப்படாத அமீபா போன்ற உயிரிகளும் உள்ளன; பல கோடி கோடி செல்களால் ஆன திமிங்கலம் போன்ற மிகப்பெரிய விலங்குகளும், ஆலமரம் போன்ற மாபெரும் தாவரங்களும் உள்ளன.

சராசரியாக, ஒரு மனிதனின் உடலில் 30 ட்ரில்லியனுக்கும் (அதாவது, 30 இலட்சம் கோடி) மேலான வெறும் கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய செல்கள் உள்ளன. [30 ட்ரில்லியன் செல்கள் = 300 ஆயிரம் கோடி = 3 இலட்சம் கோடி = 30, 000, 000, 000, 000 செல்கள்]

பல செல்களின் தொகுப்பு திசு என அழைக்கப்படும்; பல திசுக்களின் தொகுப்பு ஓர் உறுப்பு; பல உறுப்புகளை உள்ளடக்கிய தொகுப்பு, ஓர் உறுப்பு மண்டலம்; பல உறுப்பு மண்டலங்கள் சேர்ந்து உருவானது தான் நம் உடல்.

செல்லின் முக்கிய செயல்கள்

  • செல்களை அடிப்படியாகாக் கொண்டு உடல் கட்டமைக்கப்பட்டுள்ளதை மேலேயுள்ள மனித உடல் கட்டமைப்பு பிரமிடு கோபுர வரைபடம் தெளிவாகக் காட்டுகிறது.
  • செல்கள் உடலைக் கட்டமைப்பதுடன், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் துணையுடன், நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் குளுக்கோசை ஆற்றலாக மாற்றுகிறது. இதுவே செல்சுவாசம் என்று அழைக்கப் படுகிறது.

இவ்வாறு செல்களின் மூலம் கிடைக்கும் ஆற்றல் தான் நம் உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகள், பல்வேறு செயல்களைச் செய்ய உதவுகிறது.

செல்சுவாசத்திற்குத் தேவையான ஆக்சிஜன், நுரையீரலில் இரத்தத்தில் கலக்கிறது. ஆக்சிஜனேற்றம் அடைந்த தூய இரத்தம், இதயத்தின் உதவியுடன் உடலில் உள்ள அனைத்து திசுக்களில் உள்ள செல்களுக்கும் சென்றடைகிறது.

  • மேலும், செல்கள் புதிய செல்கள் உருவாவதற்கான மரபுசார்ந்த தகவல்களை அவற்றின் உட்கரு (நியூக்ளியசில்) தேக்கி வைத்துள்ளன.

உறுப்பு மண்டலங்கள், உறுப்புகள், திசுக்கள் மற்றும் செல்களுக்கிடையேயான தொடர்பு

நம் உடலில், தசை மண்டலம், எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், செரிமான மண்டலம் போன்ற பல உறுப்பு மண்டலங்கள் உள்ளன.

இரத்த ஓட்ட மண்டலத்தின் முக்கிய உறுப்பு இதயம். இது சிறப்புத் தசைத் திசுக்களாலானது. இதயத் தசைத் திசுக்கள் கோடிக்கணக்கான செல்களால் ஆனவை.

தசை, இரத்தம், எலும்பு, நரம்பு போன்றவை வெவ்வேறு வகையான திசுக்கள். அவை யாவும், தத்தம் அடிப்படை செல்களால் கட்டமைக்கப்பட்டவை. செல்களின் வடிவங்கள் அவை சார்ந்த உறுப்பு மண்டலத்தின் செயலுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

செல்லின் அளவு

ஒவ்வொரு செல்லும் 10 முதல் 100 மைக்ரான் அளவுடையது. அதாவது, 1 மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு முதல், பத்தில் ஒரு பங்கு வரை அளவுடையது.

1 மைக்ரான் என்றால், 1 மைக்ரோமீட்டர், அதாவது 1 மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. எடுத்துக்காட்டாக, ஒரு கடுகு ஏறத்தாழ 2.5 மிமீ அளவுடையது. ஒரு கடுகை 2500 சம அளவுடைய துண்டுகளாக உடைத்தால் எவ்வளவு சிறிய துகள் கிடைக்கும் என்று எண்ணிப் பாருங்கள்! அதன் அளவு ஒரு மைக்ரோ மீட்டராக இருக்கும். `

செல் எப்படி இருக்கும்?

சரி! கண்களுக்குப் புலப்படாத 10 முதல் 100 மைக்ரோமீட்டர் அளவுடைய இந்த செல்களை எப்படிப் பார்க்க முடியும்?

இவற்றை நுண்ணோக்கி (Microscope) கொண்டு பார்க்கலாம்!

நுண்ணோக்கிகளின் மூலம் ஒரு செல்லை உற்று நோக்கும்போது, அவற்றின் உள்ளே இன்னும பல நுண்ணிய செல்லுறுப்புகள் இருப்பதைக்காண முடியும்!

பொதுவாக, ஒரு விலங்குசெல்லை உற்று நோக்கினால் அவற்றின் செல்லுறுப்புகள் எப்படிக் காட்சியளிக்கும் என்பதைக் கீழே உள்ள படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மனிதனின் செல்லும் இதேபோன்று தான் காட்சியளிக்கும்.

செல் - அமைப்பு
விலங்கு செல்லின் அமைப்பு

செல்லுறுப்புகள்

ஆம்! ஒவ்வொரு செல்லும் இன்னும் பல நுண்ணிய செல்லுறுப்புகளால் ஆனது. இந்த செல்லுறுப்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு செல்லைக் கட்டமைப்பதுடன், அவையனைத்தும் பல்வேறு செயல்களைச் செய்கின்றன. செல்லின் வெளிப்பகுதி ஒரு வகையான சவ்வு போன்ற பொருளால் ஆனது. இது, ஆக்சிஜன், உணவுப்பொருள், சத்துப் பொருட்கள், நீர் போன்றவை தேவையான அளவு ஊடுருவி செல்லும் விதமாக உள்ளது. செல்லின் உட்பகுதியில் சைட்டோபிளாசம் எனும் ஜெல்லி போன்ற பொருள் உள்ளது. செல்லின் நடுப்பகுதியில் நியூக்ளியஸ் எனும் உட்கரு உள்ளது. மேலும், மைட்டோகான்ட்ரியா, கோல்கை உறுப்புகள், ரைபோசோம்கள், லைசோசோம்கள் மற்றும் பிற செல்லுறுப்புகள் சைட்டோபிளாசத்தில் பொதிந்துள்ளன.

செல்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்தாலும், அவற்றின் உள்ளேயுள்ள செல்லுறுப்புகள் பொதுவாக ஒன்றாகக் காட்சியளிப்பதுடன், ஒரே மாதிரி வேலையைச் செய்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.