வர்ஜின் ஹைப்பெர் லூப் ஒன் – வெற்றிடக் குழாய்க்குள் இயங்கும் அதிவேக மின்காந்த மிதவை இரயில் (Virgin Hyperloop One – Maglev Train in Vacuum)

Hyperloop Maglev Train

ஹைப்பெர் லூப்  (Hyperloop) தொழில்நுட்பம்

மும்பையிலிருந்து புனே-வுக்கு (180 கிலோமீட்டெர்) 13-20 நிமிடங்களில் இரயிலில் பயணம் செய்ய முடியுமா? சென்னையிலிருந்து பெங்களூருக்கு (360 கிலோமீட்டெர்) 30 நிமிடங்களில் இரயிலில் பயணிக்க இயலுமா? இது சாத்தியம் என்கிறது ஹைப்பெர் லூப் (Hyperloop Technology) தொழில்நுட்பம். சென்ற நூற்றாண்டின் கனவாக இருந்த இந்த கருத்துப்படிவம், இந்த நூற்றாண்டில், இன்னும் சில வருடங்களில், தொழில்நுட்ப மாற்றங்களுடன் உலகின் பல பகுதிகளில் செயல்முறைக்கு வர இருக்கிறது. அமெரிக்கவில் உள்ள டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் (Space-X) நிறுவனங்களின் தலைவரான எலன் மஸ்க், குறை அழுத்த குழாய்களுக்குள் அதி வேக வாகனங்களை செலுத்தும் முறை பற்றி 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முதலீட்டாளர் மற்றும் தொழில் முனைவர் ஷெர்வின் பிஷாவரிடம் முன்னுரைத்தார். ஷெர்வினின் வேண்டுகோளுக்கிணங்க, எலன் மஸ்க் ஹைப்பெர்லூப் தொழில்னுட்பத்திற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். பின்னர், ஷெர்வின் அப்போதையை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமவிடன் இத்தொழில் நுட்பத்தை விவரிக்க, இத்திட்டதிற்கான ஒப்புதலை ஒபாமா அளித்தார்.

இதன் விளைவாக, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸின் லாஸ் ஃபெல்ஸ் பகுதியில் ஒரு கேரேஜில், ஹைப்பெர் லூப்  டெக்னாலஜிஸ் (Hyperloop Technologies) நிறுவனம் ஜூன் 2014-ல் நிறுவப்பட்டது. பின்னர், இந்நிறுவனம், ஹைப்பெர் லூப் ஒன் (Hyperloop One) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, இதன் ஆராய்ச்சி மையம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில், உள்ள லாஸ் ஏஞ்செலெஸ் நகரில் உள்ளது. மேலும், சோதனை மையமும் மெட்டல் வொர்க்ஸ் எனும் உற்பத்தி ஆலையும் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் பகுதியில்  உள்ளன. 2017-ல் ஹைப்பெர் லூப் ஒன் நிறுவனம், வர்ஜின் குழுவுடன் சேர்ந்து, வர்ஜின் ஹைப்பெர் லூப் ஒன் என ஆனது.

ஏறத்தாழ ஒலியின் வேகத்தில் வர்ஜின் ஹைப்பெர் லூப்  ஒன் (Virgin Hyperloop One) இரயில்

Hyperloop-one Maglev Vactrain

வர்ஜின் ஹைப்பெர் லூப் ஒன் (Virgin  Hyperloop One) தொழில்நுட்பத்தில் இயங்கும் வெற்றிட மின்காந்த மிதவை இரயில், மணிக்கு 670 மைல்கள், அதாவது மணிக்கு ஏறத்தாழ 1078 கிலோமீட்டர் வேகத்தில் பூமிக்கு மேல் அல்லது அடியில் செல்லக்கூடியது.  இது கிட்டத்தட்ட ஒலியின் வேகத்துக்கு (340 மீட்டெர்/வினாடி) க்கு சமமான வேகம்.  இது, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அதிவேக (High-Speed Train) மற்றும் மின்காந்த மிதவை (Magnetic Levitation Train) (ஏறத்தாழ 350 கி.மீ/மணி வேகத்தில் செல்லும்) இரயில்களை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக வேகமாகவும், வழக்கமான (ஏறத்தாழ 100 கி.மீ/மணி வேகத்தில் செல்லும்) இரயில்களைவிட பத்து முதல் பதினைந்து மடங்கு அதிக வேகமாகவும் செல்லக் கூடியது. வர்ஜின் ஹைப்பெர் லூப் ஒன் இரயில்களின் சராசரி பயண வேகம், வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் இரயில் தடங்களைப் பொறுத்து மாறுபடும்.

வர்ஜின் ஹைப்பெர் லூப்  ஒன் (Virgin Hyperloop One) நிறுவனத்தின் முதல் கட்ட திட்டங்கள்:

நூற்றுக்கணக்கான மைல்களை, விமானத்தில் பயணித்தாலே மணிக்கணக்காகும் தூரங்களை சில நிமிடங்களிலேயே மக்கள் அல்லது சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் படைத்தவை இந்த வர்ஜின் ஹைப்பெர் லூப்  ஒன் (Virgin Hyperloop One) இரயில்கள். முதல் கட்டமாக, கீழே பட்டியலில் உள்ள பகுதிகளுக்கு இரயில்களை இயக்க இருக்கிறது  வர்ஜின் ஹைப்பெர் லூப்  ஒன் (Virgin Hyperloop One) நிறுவனம்.

  • கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்செலஸ் முதல் சான்ஃப்ரான்ஸிஸ்கோ பகுதி வரை
  • துபாய் முதல் அபுதாபி வரை
  • மும்பை முதல் புனே வரை
  • ஃபின்லாந்த் முதல் ஸ்வீடன் வரை

இந்தப் பட்டியலில் உள்ள சில இரயில்களின் சோதனை ஓட்டத்தை, 2020-ல் செய்ய இருப்பதாக வர்ஜின் ஹைப்பெர் லூப்  ஒன் (VirginHyperloop One) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெற்றிடக் குழாய்க்குள் மின்காந்த மிதவை இரயில்

குறைவழுத்த, கிட்டத்தட்ட பூஜ்ஜியம் அளவு காற்றழுத்தம் உள்ள, வெற்றிடக் குழாய்க்குள், நேரியல் மோட்டார்களைக் கொண்டு இயங்கும், சக்கரமற்ற மின்காந்த மிதவை பாட்-கள் (Pod) அதாவது கேப்ஸ்யூல்கள் (Capsules) மின் உந்து விசையால் (Electric Propulsion) முடுக்கி விடப்படுகின்றன. இந்த பாட்-கள் (Pod) அதாவது கேப்ஸ்யூல்களில் (Capsules) தான் நாம் பயணம் செய்ய இருக்கிறோம். உராய்வே இல்லாத வெற்றிடக் குழாய்க்குள், சக்கரமே இல்லாத மின்காந்த மிதவை பாட்-கள் (Pod) அதாவது கேப்ஸ்யூல்களில் (Capsules) நாம் பயணிக்கும் போது (வளி மண்டலத்தில் மிதந்து செல்லும் போது), கடல் மட்டத்திலிருந்து 2,00,000 அடி உயரத்தில் நாம் விமானத்தில் பயணம் செய்வது போல் இருக்கும். இதனால், இதை இயக்க குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது. இந்த வியத்தகு தொழில்நுட்பத்தை சாத்தியமாக்க, மாசற்ற சுற்றுச்சூழலைக் காக்கும் சூரிய ஆற்றல் (Solar Energy),  காற்றுத் திறன் (Wind Energy) போன்ற ஆற்றல் மூலங்களே (Energy Sources) போதும் என்கிறது வர்ஜின் ஹைப்பெர் லூப் ஒன் (Virgin Hyperloop One) நிறுவனம்.

மேலும்  வர்ஜின் ஹைப்பெர் லூப்  ஒன் (Virgin Hyperloop One) இரயில்கள் பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்ள ஹைப்பெர் லூப்  ஒன் (Hyperloop One)கீழே உள்ள இணைய தளத்தைப் பார்க்கவும்:

வர்ஜின் ஹைப்பெர் லூப்  ஒன் (Virgin Hyperloop One)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.