படி – நூலைப்படி – பாரதிதாசன் கவிதை

நூலைப்படி

படி! நூலைப்படி – பாரதிதாசன் கவிதை

நூலைப்படி – சங்கத்தமிழ்
நூலைப்படி – முறைப்படி
நூலைப்படி

காலையிற்படி கடும்பகல்படி
மாலை, இரவு பொருள்படும் படி
நூலைப்படி

கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிக்
கல்லாதவர் வாழ்வதெப்படி? நூலைப்படி!

அறம்படி பொருளைப் படி
அப்படியே இன்பம் படி
இறந்ததமிழ்நான் மறை
பிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி!

அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள் படி நல்லபடி
புகப் புகப் படிப்படியாய்ப்
புலமை வரும் என்சொற்படி நூலைப்படி!

சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி அப்படி தெரிந்துபடி
தீமை வந்திடுமேமறுபடி நூலைப்படி

பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ளநூற்களை ஒப்புவதெப்படி நூலைப்படி!

தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்காஇன் பம்மறுபடி
ஆகும்என்ற ஆன்றோர்சொற்படி நூலைப்படி!

3 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.