இசையின் வடிவம் – இசையே வடிவம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-6) (The Shape of Music: Music = Ilaiyaraaja = Music: Part-6)

இசையின் வடிவம் – இசையே வடிவம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-6) (The Shape of Music: Music = Ilaiyaraaja = Music: Part-6)

இன்று இசையின் வடிவம் மற்றும் இசையே வடிவம் என்று திகழும் நம் இசைஞானி இளையராஜாவின் 77 ஆவது பிறந்த நாள். இந்த இனிய நாளில் நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் அரிய இசைச்செல்வத்தை நமக்கு அள்ளித்தந்த அவருக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

நமது வாழ்வில் கல்விச்செல்வம், பொருட்செல்வம் போன்ற செல்வங்கள் நமக்கு இன்றியமையாதது என்றாலும், கேள்விச்செல்வம் என்ற இசைஞானியின் இசைச் செல்வம் இருந்தால் மட்டுமே நம் வாழ்வு முழுமை பெறும்.

இந்தப் பகுதியில் இசையின் வடிவம் பற்றிப் பார்க்க இருக்கிறோம். நாம் கேட்கும் இசை, அது தோன்றும் கருவியில் ஏற்படும் அதிர்வுகளைப் பொறுத்தது. இந்த அதிர்வுகள் காற்றின் மூலக்கூறுகளை அதிர்வடையச் செய்து, நம் காதுகளை அடைகின்றன. இதன் மூலம் இசைக்கருவிகளில் அதிர்வுகளை ஏற்படுத்துவதால் இசை உருவாகிறது என்பது தெரிகிறது.

ஆனால், அந்தக் கருவிகளில் எந்த நேரத்தில், எந்த அளவுக்கு, எவ்வளவு ஒலியலைகளை உருவாக்க வேண்டும் என்றும், ஒலியின் வடிவம் எப்படி இருந்தால் அது கேட்போர் செவிகளுக்கு இனிய இசையாக இருக்கும் என்றும் கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைந்த காலத்தில் தீர்மாணித்து, பல அழகிய இசை வடிவங்களை நமக்கு வாரி வழங்கி இருக்கிறார் நம் இசைஞானி.

ஒவ்வொரு கருவியும் பல்வேறு நிலைகளில் பல்வேறு அதிர்வெண்களுக்கு ஏற்றவாறு, பலவிதமான ஒலியை உருவாக்கும். அப்படியிருக்க, ஒரே நேரத்தில், பல்வேறு கருவிகள் எழுப்பும் பலவிதமான ஒலி வடிவங்களைத் தன் மனக்கண்ணின் முன் கொண்டுவந்து, அவற்றிலிருந்து பல கோடி மக்கள் ரசிக்கக் கூடிய அழகிய இசை வடிவங்களை மட்டும், தண்ணீரிலிருந்து பாலைப் பிரித்தெடுக்கும் அன்னப்பறவையைப் போல, தனியே பிரித்தெடுத்து அவர் நமக்கு அளிக்கிறார்.

அவரால் எப்படி இதுபோல் சிறப்பாகச் செய்ய முடிகிறது? இசையின் வடிவமாக, இசையே வடிவமாக நம் இசைஞானி இளையராஜா இருப்பதால் தான் இது சாத்தியமாகிறது. ஒட்டு மொத்த இசைத்தொகுப்பின் பல அழகிய வடிவங்களை அவரது மனக்கண்ணால் பார்க்க முடிகிறது.

சரி! ஒரு குறிப்பிட்ட ஒலியலையின் வடிவத்தை மட்டுமாவது நம் போன்றவர்களால் பார்க்க முடியுமா? அதற்கு ஆய்வுக்கூடங்களில் நிகழும் சில ஆய்வுகளைப் பார்த்தால் சிறு சிறு ஒலியலைகளில் வடிவங்களை நாம் காண முடியும்!

எர்ன்ஸ்ட் க்லாட்னி (Ernst Chladni) எனும் ஜெர்மானிய அறிவியலாளர், இது போன்ற ஒரு ஆய்வை, பிரான்சு மன்னர் நெப்போலியன் முன்பு செய்து காட்டினார். அதைப் பார்த்த, மன்னர் நெப்போலியன், காதுகளால் கேட்கக் கூடிய இசையை, நம் கண்களுக்குத் தெரியும்படி செய்து விட்டார் க்லாட்னி என்று புகழ்ந்தார்.

இன்று எர்ன்ஸ்ட் க்லாட்னி இருந்திருந்தால், அவரது அறிவியல் ஆய்வுகளை ஓரமாக வைத்துவிட்டு, இசையின் வடிவமாக நம் இளையராஜாவையேக் காட்டி இருப்பார்!

இசையின் வடிவத்திற்கான க்லாட்னியின் ஆய்வு

சரி! க்லாட்னியின் ஆய்வு பற்றி தெரிந்து கொள்வோம்:

ஒவ்வொரு இசைக்கருவி எழுப்பும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஒலிக்கும் ஒரு அதிர்வெண் உள்ளது. எர்ன்ஸ்ட் க்லாட்னி (Ernst Chladni) வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், ஐங்கோணம், அறுகோணம், போன்ற பல்வேறு வடிவங்களில் உள்ள மெல்லிய உலோகத் தட்டுகளை எடுத்துக்கொண்டார். இந்தத் தட்டுகள் வெவ்வேறு உலோகங்களால் ஆனவை. ஒவ்வொறு தட்டும் வெவ்வேறு தடிமன் கொண்டவை.

முதலில் ஒரு தட்டைத் தனியே எடுத்துக்கொண்டு, அதில் மணல் துகள்களைத் தூவினார். வயலின் இசைக்கருவியின், வில்லைக்கொண்டு, தட்டின் விளிம்பில் ஒலி எழும்பும்படி மீட்டினார். ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒலி அதிரும்போது, அதே அதிர்வெண்ணுக்கு அந்தத் தட்டிலும் அதிர்வுகள் ஏற்பட்டு, அதன் மேற்பரப்பில் உள்ள மணல் துகள்கள் அதிர்ந்து, தட்டின் மேல் அழகிய கோலம் போட்டது போன்ற ஒரு குறிப்பிட்ட வடிவத்தை அவை உருவாக்கின. மேலும், தட்டின் விளிம்பின் மற்றொரு பகுதியில் வில்லைக் கொண்டு மீட்டும்போது, வேறுவிதமான ஒலி, அதற்கேற்றபடி வேறு அதிர்வெண், அதன் மூலம் வேறு மணல் வடிவம் உருவானது.

இதுபோன்று, தட்டின் உலோகம், வடிவம், தடிமன் ஆகியன வேறுபடும் போது வெவ்வேறு ஒலிக்கேற்றபடி, வெவ்வேறு அழகிய வடிவங்கள் உருவாகின. மணல் துகள்களுக்குப் பதில் மரத்தூள், உப்பு ஆகிவற்றைப் பயன்படுத்தியபோதும், இதுபோன்ற பல ஒலி வடிவங்கள் தோன்றின.

இதுபோன்ற ஆய்வுகளை நம் இசைஞானியின் படைப்புகளுக்குச் செய்தால் அதிலிருந்து உருவாகும் வடிவங்கள் எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!

இதுபோன்ற ஒரு ஆய்வைக் கீழ்க்கண்ட காணொளியில் காணலாம்:

இசையின் வடிவங்களைக் காட்டும் மற்றொரு காணொளி:

(தொடரும்…

இசை = இளையராஜா = இசை முந்தைய பதிப்புகள்

2 Comments

  1. மிகவும் அருமையான பதிவு… பொதுவாக இசையை பெருமளவில் இயற்கையுடனும் இறைவனுடனும் தான் இணைத்துக் கூறுவார்கள்.. ஆனால் இசையின் அறிவியலை இசைஞானியின் பிறந்த நாளில் இசைநயம் குன்றாமல் அளித்துள்ளார் ஆசிரியர் 👏👏👏 இசைஞானி இசையுலகிற்குக் கிடைத்த வரம்..

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.