இசைஞானியின் இசைமந்திரம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-5): Maestro’s Magic (Music = Ilaiyaraaja = Music)

இசைஞானியின் இசைமந்திரம்

இசைஞானியின் இசைமந்திரம் – இளையராஜாவின் படைப்புகள் – ஒரு புள்ளியியல் ஆய்வு: இசை = இளையராஜா = இசை (பகுதி-5): Statistical Analysis of Maestro’s Magical Creations (Music = Ilaiyaraaja = Music): Part – 5

வியத்தகு அரிய இசை வடிவங்களை சொடுக்கிடும் சில நொடிப்பொழுதுகளில் படைத்துக்காட்டும் இசைஞானி இளையராஜாவின் இசைமந்திரத்தின் (Maestro’s Magic) பயனாக, அவர் இசையமைத்த திரைப்படங்களில் ஒரு பகுதியின் புள்ளிவிவரங்களை (Statistical Analysis of Maestro’s Magical Creations), இந்தப் பகுதியில் பார்ப்போம்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பல விதமான உணவு வகைகளுக்கு தனிப்பட்ட சுவையும் தனிச்சிறப்பும் இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாகச் சுவைக்கும் போது அத்தகைய உணவு வகைகளின் தனித்துவம் நம்மை ஒரு விதமாக ஈர்த்து இருக்கும். அவற்றின் சுவையில் மெய்மறந்த நாம் வேறொரு உலகத்திற்கே சென்றது போல் கூட உணரலாம். ஆனால், சில நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகள் அதுபோன்ற உணவுகளைச் சுவைத்து மெய் மறந்து விட்டு, வீடு திரும்பி வந்து, அம்மாவின் கைப்பக்குவத்தில் அன்புடனும் அக்கறையுடனும் கலந்து உருவான உணவைச் சுவைக்கும் போது எப்படி இருக்கும்? அம்மா சமைத்த உணவு நம் நாவில் பட்ட அக்கணமே, இதற்கு முன்பு நம்மை மெய்மறக்கச் செய்த உலக உணவு வகைகள் எல்லாம் மிகச் சாதாரணமாக இருப்பதை நாம் உணரலாம்.

அதுபோலவே, உலகின் பல தனித்தன்மை வாய்ந்த புகழ்பெற்ற இசைப்பாடல்களைக் கேட்டுவிட்டு, பின்பு நம் இசைஞானி இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது, மற்ற பிற பாடல்கள் எல்லாம் அவரது இசையைவிட நமக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றுவதை உணரலாம். அவரது பாடல்கள் இவ்வண்ணம் உயர்ந்து நிலைத்து நிற்பதற்குப் பல்வேறு சிறப்பான காரணங்கள் இருந்தாலும், அவரது ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு புதிய பரிமாணம் இருப்பதும்,  ஒரு முக்கிய காரணம். இத்தகைய சிறப்புகளால் தான் அவரால் ஆயிரம் திரைப்படங்களையும் தாண்டி, பல ஆயிரக்கணக்கான இசை வடிவங்களைக் கொடுக்க முடிகிறது. அவர் இசையமைத்த பன்மொழித் திரைப்படங்கள் பற்றிய புள்ளிவிவரங்களைப் பார்க்கும் முன் ஒரு அழகிய பாடலுடன், இந்தப் பகுதியை தொடங்குவோம்:

அமுதே தமிழே… அழகிய மொழியே… எனதுயிரே (படம்: கோயில் புறா, 1981, பாடியவர்கள்: பி. சுசீலா, உமா ரமணன், பாடலாசிரியர்: புலமைப்பித்தன்)

இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள்! தமிழின் அழகையும் இனிமையையும் போலவே, இந்தப் பாடலின் மெட்டும், இடையே இழைந்து வரும் இசையும், அழகிய வரிகளும், பாடகர்களின் குரல்களும், எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுது!


இளையராஜா இசையில் அமைந்த ஒட்டுமொத்த திரைப்படங்களின் வட்ட வடிவ பை வரைபடம் (PIE Chart)

மேலேயுள்ள வட்ட வடிவ பை வரைபடம் (PIE Chart), இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படங்களில் ஏறத்தாழ ஓராயிரம் படங்களை மாதிரித் தகவல்களாகக் கொண்டு புள்ளியியல் விவரங்களைக் காட்டுகிறது. அவர் ஆயிரத்து நூறு திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். இருப்பினும், இந்தப் பகுதியில், நமக்குக் கிடைத்துள்ள மாதிரித்தகவல்களைக் கொண்டு, சில புள்ளியியல் ஆய்வுகளைப் பார்ப்போம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் இளையராஜா இதுவரை இசையமைத்த மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மொழிவாரியாக மேலேயுள்ள பை விளக்கப்படம் வரையப்பட்டுள்ளது.

  • இந்த திரைப்பட வட்டத்தின் பெரும் பகுதியில் உள்ள நீல நிற வட்டத்துண்டு, தமிழ்ப்படங்களைக் குறிக்கிறது. அதாவது, ஏறத்தாழ 75% திரைப்படங்கள் தமிழ்ப்படங்கள் (அதாவது, 700க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான படங்கள் தமிழ்மொழிப் படங்கள்).
  • அதற்கு அடுத்ததாக பச்சை நிற வட்டத்துண்டு; 13% மேல் (அதாவது, எண்ணிக்கை 125க்கும் மேல்) தெலுங்கு மொழிப் படங்கள் உள்ளதைப் பச்சை நிற வட்டத் துண்டு காட்டுகிறது.
  • மஞ்சள் நிற வட்டத்துண்டு: மலையாளம் (6%க்கும் மேல் அதாவது எண்ணிக்கை 50க்கும் மேல்),
  • செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிற வட்டத்துண்டு: கன்னடம் (4%க்கும் மேல் அதாவது எண்ணிக்கை 35க்கும் மேல்),
  • சிவப்பு நிற வட்டத்துண்டு: ஹிந்தி (1.5%க்கும் மேல் அதாவது எண்ணிக்கை 15க்கும் மேல்),
  • இளஞ்சிவப்பு (பிங்க்) நிற வட்டத்துண்டு: ஆங்கிலம் (0.3%க்கும் மேல் அதாவது எண்ணிக்கை 3) மற்றும்
  • ஊதா (வைலட்) நிற வட்டத்துண்டு: மராத்தி (0.2%க்கும் மேல் அதாவது எண்ணிக்கை 2)

இளையராஜா இசையில் அமைந்த திரைப்படங்களின் ஒவ்வொரு பத்தாண்டுக்குமான பட்டை வடிவ வரைபடம் (Decade-wise Bar Chart)

1976 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பத்தாண்டிலும் (Decades – 1970கள், 1980கள், 1990கள், 2000கள், 2010கள்) அவர் இசையில் உருவான திரைப்படங்களின் தோராயமான புள்ளியியல் விவரங்களைக் காட்டும் பட்டை விளக்கப்படம் (Bar Chart) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலேயுள்ள பை வரைபடத்தைப் போலவே, இந்த பட்டை வரைபடத்திலும், ஒவ்வொரு மொழியைச் சார்ந்த திரைபடங்களுக்கும் ஒரு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 1970களில் (அதாவது 1976 முதல் 1979 வரையிலான நான்கு ஆண்டுகளில்), இளையராஜா இசையமைத்த ஏறத்தாழ 75 திரைப்படங்களில், 60க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களும், மற்றும் மீதமுள்ள பிற மொழிப்படங்களும் (தெலுங்கு, மலையாளம், கன்னடம்) அடங்கும்.

1980களில் (அதாவது 1980 முதல் 1989 வரை) 325-க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்கள், 60-க்கும் மேலான தெலுங்குப் படங்கள், 15-க்கும் மேலான மலையாளம் மற்றும் கன்னடப் படங்கள் 3 ஹிந்திப் படங்கள் மற்றும் 1 ஆங்கிலப் படம் என மொத்தம் 415-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் அவரது இசையில் வெளிவந்துள்ளன.

இதேபோல் 1990களில் (1990 – 1999) மொத்தம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 2000-களில் (2000 – 2009) ஏறத்தாழ 100 படங்கள் மற்றும் 2010களில் (2010 – இதுவரை) 70க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. இந்த விவரங்கள் நம்மிடம் உள்ள மாதிரித் தகவல்களின் அடிப்படையிலான ஒரு தோராயக்கணக்கீடுதான். துல்லியமான தகவல்கள் இதை விட அதிகமான எண்ணிக்கையில் இருக்கும்.


இளையராஜா இசையில் அமைந்த திரைப்படங்களின் ஒவ்வொரு ஆண்டுக்கான பட்டை வடிவ வரைபடம் (Yearly Bar Chart)

மேலேயுள்ள விவரங்களை, ஒவ்வொரு ஆண்டுக்கும் எத்தனை படங்கள் என்ற வீதத்தில் (தோராயக்கணக்கீடு) தெரிந்துகொள்ள கீழுள்ள பட்டை விளக்கபடத்தைப் பார்க்கவும்.


இதுவரை பார்த்ததுபோல், மேலும் அவரது படைப்புகளின் சிறப்புகளைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம். (தொடரும்…)

இளையராஜாவின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்புகள்


குருவிரொட்டியின் முந்தைய பதிப்புகள்Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.