நிலவில் ஒரு தேடல் – சந்திரயான்-2 (Chandrayaan – 2 – Lunar Expedition)

Chandrayaan - 2

நிலவில் ஒரு தேடல் – சந்திரயான் – 2 (Chandrayaan – 2)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ – Indian Space Research Organization – ISRO), சந்திரயான் – 2 (Chandrayaan – 2) செயற்கைக்கோளை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, 22-ஜூலை-2019-ஆம் தேதியன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

ஆய்வுகள்

 • நிலவின் மேற்பரப்பின் வடிவமைப்பு பற்றிய விரிவான ஆய்வுகள்;
 • கனிம வளங்கள் பற்றிய ஆய்வுகள்;
 • சந்திரயான்-1-ன் ஆய்வுகளைத் தொடரும் வகையில் நிலவில் உள்ள நீர் மூலக்கூறுகள் பற்றிய சோதனைகள்;
 • தனித்தன்மை கொண்ட வேதிக் கூட்டுப் பொருட்களை உள்ளடக்கிய புதிய பாறை வகைகள், மற்றும் இன்னும் பல ஆய்வுகளை செய்ய இருக்கிறது சந்திரயான்-2.

இதற்கு முன்பு, 22-அக்டோபர்-2008 -ஆம் ஆண்டு இஸ்ரோ நிறுவனத்தால் ஏவப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 312 நாட்களுக்கு மொத்தம் 3400 சுற்றுகள் வெற்றிகரமாகச் சுற்றி, நிலவைப் பற்றிய பல அரிய தகவல்களை நமக்கு அளித்தது.

இப்போது அதன் இரண்டாம் கட்டமாக, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியுள்ளது. நிலவின் வட்டப்பாதையில் சுற்றுவது (Orbiter) மட்டுமல்லாமல், விக்ரம் எனப்படும் இறங்குகலத்தை (Vikram – Lander) நிலவின் தென்பகுதியில் மெல்ல தரை இறக்கி, பிரக்யான் எனப்படும் ஆய்வு ஊர்தியை (Pragyan – Rover) நிலவின் பரப்பில் சுற்றிவரச் செய்து, பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதே இஸ்ரோவின் சந்திரயான்-2 திட்டமாகும்.

 • சந்திரயான் – 2 விண்ணில் செலுத்தப்பட்ட தேதி: 22-ஜூலை-2019.
 • சந்திரயான் – 2 நிலவில் இறங்க இருக்கும் நாள்: 07-செப்டெம்பர்-2019
 • இது நிலவின் பரப்பின் மீது இறங்கி அறிவியல் சோதனைகள் நிகழ்த்த இருக்கும் கால அளவு: 1 நிலவு நாள் (அதாவது 14 பூமி நாட்கள்)
 • இது நிலவில் வேறு எந்த நாடும் சென்றிராத தென் துருவப் பகுதிக்குச் செல்கிறது.
 • இதுவரை பிற நாடுகள் மொத்தம் 38 முறை நிலவில் மெல்லிறக்கம் (Soft Landing) செய்ய முயற்சி செய்துள்ளன. 38 முயற்சிகளில் மொத்தம் 52% மட்டுமே வெற்றியடைந்துள்ளன.

ஏவுகணை மற்றும் ஏவுதளம்

இந்தியாவின் மிக அதிக திறனுள்ள, 4 டன்கள் எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவக்கூடிய, புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுகலம் – வடிவம் – 3 – எம்-1 (GSLV Mk-III – Geosynchronous Satellite Launch Vehicle – Mark – III – M1) மூலம் சந்திரயான் – 2, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா நகரில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் ஏவுதளத்திலிருந்து, விண்ணில் ஏவப்பட்டது.சந்திரயான்-2 -ன் மூன்று முக்கிய பகுதிகள்

1. செயற்கைத் துணைக்கோள் (ஆர்பிட்டர் – Orbiter)

இது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றும் செயற்கைத் துணைக்கோள் (ஆர்பிட்டர் – Orbiter). இதன் எடை 2,379 கிலோகிராம் மற்றும் மின் உற்பத்தித் திறன் 1000 வாட்கள். இது ஒரு ஆண்டு காலத்திற்கு நிலவைச் சுற்றி வந்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.

2. இறங்குகலம் (லேண்டெர்Lander)விக்ரம்(Vikram)

இந்த இறங்குகலம் (லேண்டெர்Lander)விக்ரம்(Vikram) நிலவின் பரப்பின் மீது மென்மையாக / மெல்ல இறங்கும் (மெல்லிறக்கம் – Soft Landing) தொழில்நுட்பத்துடன் கூடியது. இது செயற்கைக்கோளிலிருந்து (ஆர்பிட்டர் – Orbiter) தனியாகப் பிரிந்து நிலவில் தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து நிலவின் பரப்பில் மெல்ல பாதுகாப்பாக இறங்கும். இதன் எடை 1,471 கிலோகிராம் மற்றும் மின் உற்பத்தித் திறன் 650 வாட்கள்.

3. ஆய்வு ஊர்தி (ரோவர் – Rover) – பிரக்யான்(Pragyan)

இது நிலவின் பரப்பில் சுற்றித் திரியும் ஆய்வு ஊர்தி (ரோவர் – Rover). விக்ரம் இறங்குகலம் (Vikram – Lander) நிலவில் மெல்ல, பாதுகாப்பான இடத்தில் இறங்கியவுடன், அதிலிருந்து பிரக்யான் ஆய்வு ஊர்தி, ஊர்ந்து வெளியே புறப்பட்டு வரும். இது 1 நிலவு நாள், அதாவது 14 பூமி நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு, விக்ரம் இறங்குகலத்திற்கு (Vikram – Lander) தகவல்களை அனுப்பும். பின்னர் இந்தத் தகவல்கள் இறங்குகலத்திலிருந்து, செயற்கைக் கோள் (ஆர்பிட்டர் – Orbiter) மூலம் பூமியில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையங்களுக்கு தகவல்களை அனுப்பும். இந்த ஆய்வு ஊர்தி, நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து மொத்தம் 500 மீட்டர் (அதாவது 1/2 கிலோமீட்டர்) தொலைவுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொள்ளும். இதன் எடை 27 கிலோகிராம் மற்றும் மின் உற்பத்தித் திறன் 50 வாட்கள்.

இஸ்ரோ வெளியிட்டுள்ள கீழ்க்கண்ட மாதிரிக் காணொளிக் காட்சியில், பின்வரும் நிகழ்வுகளின் விளக்கக் காட்சிகளைக் காணலாம்;

 • புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுகலம் – வடிவம் – 3 – எம்-1 (GSLV Mk-III – Geosynchronous Satellite Launch Vehicle – Mark – III – M1) மூலம் பூமியிலிருந்து சந்திரயான் – 2 ஏவப்படுதல்;
 • விண்வெளியில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி ஏவுகணையிலிருந்து பிரிந்த சந்திரயான் – 2 முதலில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி, பின்னர், நிலவை நோக்கிப் பயணித்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருவதல்;
 • சந்திரயான் – 2 விண்கலத்திலிருந்து, விக்ரம் இறங்குகலம் (விக்ரம் லேண்டெர் – Vikram – Lander) தனியாகப் பிரிதல்;
 • நிலவின் பரப்பிற்க்கு சற்று மேல் வந்தடைந்த விக்ரம் இறங்குகலம், தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து மெல்ல நிலவில் தரை இறங்குதல்;
 • விக்ரம் இறங்குகலத்திலிருந்து வெளியே வந்த பிரக்யான் ஆய்வு ஊர்தி (பிரக்யான் ரோவர் – Pragyan Rover), நிலவின் தரைப்பரப்பில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு ஊர்ந்து செல்லுதல்.

மேலே கூறப்பட்ட விளக்கக் காட்சிகளைக் கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கிக் காணலாம்:

இஸ்ரோவில் ஜி.எஸ்.எல்.வி ஏவுகணையுடன், சந்திரயான்-2 விண்கலம் இணைக்கப்படுவதைக் கீழ்க்கண்ட காணொளிக்காட்சியில் காணலாம்:

நிலவைப் பற்றிய சில அறிவியல் உண்மைகள்

 • நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,84,000 கிலோமீட்டர்கள் (கி.மீ).
 • நிலவின் விட்டம் 3,476 கி.மீ. இது பூமியின் விட்டத்தில் கால் பங்காகும்.
 • நிலவின் நிறை பூமியின் நிறையில் 81-ல் ஒரு பங்கு (1/81).
 • நிலவின் மேற்பரப்பில் உள்ள ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்குதான் (1/6) இருக்கும்.
 • நிலவில் வளிமண்டலம் இல்லை. அதனால் தான் அங்கு திரவ நிலையில் நீர் இல்லை.
 • நிலவில் சூரிய ஒளி படும் பக்கத்தில், பகலில் 130 டிகிரி செல்சியஸ் கொளுத்தும் வெப்பமும், இரவில் -180 டிகிரி செல்சியஸ் உறைய வைக்கும் குளிரும் இருக்கும்.
 • இதுவரை நிலவில் எந்த உயிரினமும் இருப்பதற்கான / இருந்ததற்கான தடயமும் கண்டறியப்படவில்லை.
 • சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களை மொத்தம் 190-க்கும் அதிகமான நிலாக்கள் (துணைக்கோள்கள்) சுற்றுகின்றன. அவற்றுள் பூமியின் நிலவு ஐந்தாவது பெரிய துணைக்கோள்.


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.