யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன் – புறநானூறு: 192

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன் – புறநானூறு: 192 – இயல்தமிழ்

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்


(5) இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும் அல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்


(10) முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

கணியன் பூங்குன்றன் – புறநானூறு: 192


விளக்கம்

எமக்கு எல்லாமும் எமது ஊர்; எல்லாரும் எம் சுற்றத்தார்; தீமையும், நன்மையும், தமக்குத் தாமே ஆக்கிக்கொள்வன; மற்றபடி, அவை பிறர் தர வருவன அல்ல; அதுபோலவே வருந்துதலும் வருந்தாது இருத்தலும், தாமே வருபவையன்றி, பிறர் தர வருவன அல்ல; சாதலும் புதிது அல்ல; யாம் வாழ்தலை இனிதென்று மகிழ்வதும் இல்லை; யாம் வெறுப்பால் வாழ்வு இனியதன்று என்று இருப்பதும் இல்லை.

மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பொழிவதால், அளவில்லாமல் கல்லின்மீது மோதுவதால் ஏற்படும் ஒலியுடன், பாய்ந்து ஓடக்கூடிய பெரிய ஆற்றுநீரின் மீது மிதந்து செல்லும் படகு போல, அரிய உயிரும் முறை வழியே செல்லும் என்பதை அறிஞர்கள் இயற்றிய நூல்கள் வழியே தெளிவாக அறிந்தோம். அதனால், யாம் மேன்மைமிகு பெரியோரைப் பாராட்டுவதும் இல்லை. அத்தகைய மேன்மை இல்லாதாவரை இகழ்வதும் இல்லை.

6 Comments

  1. கணியன் பூங்குன்றனாரின் இந்த புறநானூற்றுப் பாடல் ஒன்றே உலகின் அனைத்து சுகதுக்கங்களுக்குமான முழுமையான எளிமையான ஆழமான விடைதரும் ஒப்புயர்வற்ற 13 வரிப்பாடல்.

    தினமும் ஒருமுறை இப்பாடலை பொருளுணர்ந்து நாம் உச்சரித்தல் மிக அத்தியாவசியமானது

  2. Very nice explanation. It shows how people,at those times, tried to live their lives in tune with nature

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.