செய்வினை செய்வான் செயல்முறை – குறள்: 677

செய்வினை செய்வான் செயல்முறை

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.   – குறள்: 677

                – அதிகாரம்: வினைசெயல்வகை, பால்: பொருள்

கலைஞர் உரை

ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மேற்கூறியவாறு செய்யப்பட வேண்டிய வினையைச் செய்யுமாறு மேற்கொண்டவன் செய்யவேண்டிய முறையாவது; அவ்வினையை ஏற்கெனவே செய்து அதன் உள்மருமங்களை அறிந்தவனது கருத்தையறிந்து அதன்படி செய்தலாம்.

மு. வரதராசனார் உரை

செயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும்.

G.U. Pope’s Translation

Who would succeed must thus begin: first let him ask
The thoughts of them who throughly know the task.

– Thirukkural: 677, Modes of Action, Wealth

உதாரணம் (விளக்கப்படம்)

படத்தில் உள்ள குட்டி யானை, ஆற்றின் ஆழம் தெரியாமல், தானாகவே இறங்கி நீர் அருந்தவோ, குளிக்கவோ கூடாது. அது அதற்கு பாதுகாப்பானது அல்ல. பட்டறிவு மிகுந்த, ஆற்றின் ஆழம் அறிந்த அதன் தாயின் அறிவுரைப் படி ஆற்றில் குட்டி இறங்கினால் தான், அதற்கு பாதுகாப்பாக இருக்கும். அது போல, ஒரு செயலில் ஈடு படுகிறவன், அந்த செயலைப் பற்றி நன்கு உணர்ந்தவனின் கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் அந்த செயலில் வெற்றி பெற முடியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.