சூரியகிரகணம் எப்படி நிகழ்கிறது? (How does Solar Eclipse Occur?)

Solar Eclipse

சூரியகிரகணம் எப்படி நிகழ்கிறது? (How does Solar Eclipse Occur?)

தன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் நிலா, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது சூரிய ஒளி மறைக்கப்படுகிறது. அப்போது நிலாவின் நிழல் பூமியின் மீது விழும் பகுதிகளில் இருள் சூழ்கிறது. இதுவே சூரியகிரகணம் (Solar Eclipse) என அழைக்கப்படுகிறது.

நிலாவைவிட சூரியன் 400 மடங்கு பெரியதாக உள்ளது. இருப்பினும், பூமியிலிருந்து, நிலாவைவிட 400 மடங்கு அதிக தொலைவில் சூரியன் இருப்பதால், நிலவின் அளவுக்குச் சமமாக சூரியன் இருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது. அதனால் தான் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வரும்போது நிலா, சூரியனை முற்றிலும் மறைக்கிறது. அப்போதுதான், முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) தோன்றுகிறது. இந்நிகழ்வின்போது, பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இரவு நேரம் போல் இருள் சூழ்கிறது.

பொதுவாக, சூரியகிரகணத்தின்போது, இப்படி இருள் சூழ்வதால், இரவு நேரம் வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, பறவைகள் கூட்டைச் சென்றடையும். விலங்குகளும் குழப்பத்தில் ஒலி எழுப்பும்.


சூரியகிரகணத்தின் பல்வேறு நிலைகள் (Various Stages of Solar Eclipse)

நிலா, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் மாதந்தோறும் வருகிறது. அப்படியெனில், ஏன் சூரியகிரகணம் ஒவ்வொரு மாதமும் தோன்றுவதில்லை? பூமியைப் பொறுத்து வடக்கு / தெற்காக நிலவின் வட்டப்பாதை சாய்ந்துள்ளதால், நிலவின் நிழல் மாதம்தோறும் பூமியின் மீது விழுவதில்லை. அதாவது, நிலா சூரியனை மறைக்கும் நிகழ்வு (சூரியகிரகணம்) ஏற்படுவதில்லை.

  • நிலவின் அடர்ந்த நிழல், பூமியில் முழுமையாக விழும் பகுதிகளில் இருப்பவர்களுக்கு, நிலா சூரியனை முற்றிலும் மறைக்கும் முழு கிரகணத்தைப் (Total Eclipse) பார்க்க முடியும். பிற பகுதிகளில் இருப்போருக்கு பகுதி கிரகணம் (Partial Eclipse) மட்டுமே தெரியும்.
  • நிலவின் சுற்று வட்டப்பாதை, நீள்வட்டமாக இருப்பதால், சில நேரங்களில் நிலா பூமிக்கு அருகிலும், சில நேரங்களில் தொலைவிலும் இருக்கும். இதனால், சில நேரங்களில், நிலா முழுமையாக சூரியனை மறைப்பதில்லை. அப்போது, நிலவைச் சுற்றி ஒரு நெருப்பு வளையம் (Ring of Fire) இருப்பது போல் காட்சி அளிக்கும். இதற்கு வளையக் கிரகணம் (Annular Eclipse) என்று பெயர்.
  • பூமியின் சில பகுதிகளில் இருப்பவர்களுக்கு முழுக் கிரகணம் (Total Eclipse) தோன்றும். மற்றும் பிற பகுதிகளில், வளைய வடிவ கிரகணம் (Annular Eclipse) தோன்றும். இதற்கு கலப்பு கிரகணம் (Hybrid Eclipse) என்று பெயர்.

முக்கிய குறிப்பு: சூரியகிரகணத்தை (Solar Eclipse) நேரடியாகப் பார்க்கக் கூடாது. சூரிய ஒளிக் கதிர்களை சிறிதளவு பார்க்க நேரிட்டாலும், அது நம் கண் பார்வையைப் பாதிக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.