மண்வாசனை எப்படி உருவாகிறது?

மண்வாசனை (Sweet Smell of Soil)

மழையின் போது மண்வாசனை (Sweet Smell of Soil) எப்படி உருவாகிறது?

நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது! சரி! அந்த வாசனையில் சில நிமிடங்கள் மெய் மறக்கும் நீங்கள், எப்போதாவது அது எப்படித் தோன்றுகிறது என்று நினைத்ததுண்டா? இந்தக் கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றி இருக்கும்! அதற்கான விடையை இந்த ஏன்-எப்படி? பகுதியில் இப்போது தெரிந்து கொள்வோம்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இசபெல் ஜாய் பேர் (Isabel Joy Bear) மற்றும் ஆர்.ஜி. தாமஸ் (R.G. Thomas), வறட்சிக்குப் பின் வரும் புது மழையில் தோன்றும் மண்வாசனையைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது, இந்த வாசனைக்குப் பெட்ரிக்கார் (Petrichor) எனப் பெயரிட்டனர். மண்வாசனை, மூன்று விதமான காரணங்களால் உருவாகிறது;

  • வறட்சிக் காலங்களில் சில தாவரங்கள், வறண்ட நிலத்தில் விதைகள் முளைத்து வீணாவதைத் தடுக்க, ஒரு விதமான எண்ணெயை வெளிவிடுகின்றன. மண்ணிலும், பாறைகளிலும் ஊறிக் கலந்து இருக்கும் இந்த எண்ணெய், மழை பெய்யும்போது, பலகூட்டுப் பொருட்களுடன் சேர்ந்து, காற்றில் கலந்து மணம் வீசுகிறது.
  • ஈரமான, வனப்பகுதிகளில், மண்ணில் வாழும் ஆக்டினோமைசேட்டிஸ் (Actinomycetes) எனும் ஒரு வகையான பாக்டீரியா, விதை மூலங்களை (Spores) வெளியிடும்போது, ஜியோஸ்மின் (Geosmin) எனப்படும் வேதிக்கூட்டுப் பொருளை சுரக்கின்றன. இந்தக் கூட்டுபொருள், மழை நீர் நிலத்தில் விழும்போது மண்ணிலிருந்து வெளிப்பட்டு, ஈரக்காற்றில் கலந்து மணம் வீசுகிறது.
  • இடி, மின்னலில் வெளியாகும் மின்னூட்டம் பெற்ற துகள்கள் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளிடையே வேதிவினையைத் தூண்டி, நைட்ரிக் ஆக்சைடை (NO) உருவாக்குகின்றன. இது வளிமண்டலத்தில் இருக்கும் வேதிப்பொருட்களுடன் வினைபுரிந்து ஓசோன் (Ozone – O3) வாயுவை உருவாக்குகிறது; மழைக் காற்றுடன் கலந்து வரும் இந்த ஓசோன் வாயு, குளோரினின் மணத்தை நினைவூட்டக் கூடியது. எங்கிருந்தோ வரும் மழைக் காற்றில் கலந்து வரும் இந்த வாயுவினால் தான், மழை வருவதற்கு முன்பே, மழை மணத்தை நம்மால் உணரமுடிகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.