கருணைக்கிழங்கு (சேனைக்கிழங்கு / Elephant Foot Yam) என்றாலே நம் நினைவுக்கு வருவது, சுவை மிக்க கருணைக்கிழங்கு வறுவலும், காரக்குழம்பும் தான். அதுவும், முந்தைய இரவு வைத்த கருணைக்கிழங்கு காரக்குழம்பை மறுநாள் வைத்து சாப்பிடும்போது, பல மடங்கு கூடி இருக்கும் அதன் சுவையே தனி. இன்றைய பகுதியில், ஒரு மாறுதலுக்காக கருணைக்கிழங்கு துவையல் (Elephant Foot Yam Chutney) செய்து சுவைப்பது பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- கருணைக்கிழங்கு (சேனைக்கிழங்கு) = 150 கிராம்
- கடலைப் பருப்பு = 2 தேக்கரண்டி
- பூண்டு = 5 பற்கள்
- காய்ந்த மிளகாய் = 7
- வெந்தயத்தூள் = ஒரு சிட்டிகை
- தனியா (கொத்தமல்லி) = 1 தேக்கரண்டி
- வெங்காயம் = ஒன்று
- புளி = 1 சுளை
- தேங்காய் = 2 துண்டுகள்
- கறிவேப்பிலை = ஒரு சிறிய தழை (கொத்து)
- சமையல் எண்ணெய் = 50 மி.லி.
- பெருங்காயத்தூள் = ஒரு சிட்டிகை
- சமையல் உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை:
- கருணைக்கிழங்கை தோல் சீவி, மெலிதாக அரிந்து எடுத்துக் கொள்ளவும்
- அடுப்பைப் பற்ற வைத்து, அதில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன், கருணைக்கிழங்கைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- அடுப்பை மெதுவாக எரியவிட்டு, கடலைப் பருப்பு, மிளகாய், தனியா மூன்றையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்த கடலைப் பருப்பு, மிளகாய், தனியா, ஆகியவற்றை, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இவை பாதி மசிந்தவுடன், பொன்னிறமாக வறுத்த கருணைக்கிழங்கு, தேங்காய், வெங்காயம், புளி, கறிவேப்பிலை, பூண்டு, வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இப்போது, சுவையான, மணமுடன் கூடிய, கருணைக்கிழங்குத் துவையல் தயார். இது அனைத்து வகையான சாதம் வகைகளுக்கும், சிற்றுண்டி உணவு வகைகளுக்கும் சேர்த்து உண்ண உகந்ததாக இருக்கும்.
Be the first to comment