ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர்

ஆடிக் குடத்தடையும்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளனவே யோது.

– காளமேகப் புலவர்

மேற்போக்கான சொல்லமைப்பிலே ஒன்றாகவும், ஆராய்ந்து பார்த்தால் இரு பொருள்படும்படியும் அமைந்துள்ள பாடல் சிலேடைப்பாடல் எனப்படும். இதற்கு இரட்டுற மொழிதல் என்றும் பெயர். செய்யுளில் வரும் சொற்களை நன்றாக ஆராய்ந்து பொருள்நயத்தை உணரவேண்டும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள காளமேகப்புலவரின் இப்பாடல், ஒரே பாடலாக இருப்பினும், நன்கு ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு சொல்லும் பாம்புக்கும் எள்ளுக்கும் பொருத்தமானதாக அமைகிறது. அதாவது, பாம்பைப் பற்றி விளக்குவதுபோல் அமைந்த இதேபாடல், எள்ளைப் பற்றி விளக்குவதாகவும் அமைகிறது.

புலியூர்க் கேசிகன் உரை

பாம்பு:

Snake
  • ஆடிக்குடத்து அடையும் – பாம்பு, படமெடுத்து ஆடியபின் குடத்திலே சென்று அடைந்திருக்கும்.
  • ஆடும்போதே இரையும் – ஆடுகின்ற போதிலே, சீத்துப் பூத்தென்று இரைச்சலிடும்.
  • மூடித்திறக்கின் முகம் காட்டும் – குடத்தை மூடித்திறந்தால், தன் தலையை வெளியே உயர்த்திக்காட்டும்.
  • ஓடி மண்டை பற்றில் பரபரெனும் – விரைந்து அதன் தலையைப் பற்றிக்கொண்டால், பரபரென்று சுற்றிக்கொள்ளும்.
  • பாரிற் பிண்ணாக்கும் உண்டாம் – உலகிற் பிளவுபட்ட நாக்கும் அதற்கு உண்டாம்.

பாம்பு, படமெடுத்து ஆடியபின் குடத்திலே சென்று அடைந்திருக்கும்; ஆடுகின்ற போதிலே, சீத்துப் பூத்தென்று இரைச்சலிடும்; குடத்தை மூடித்திறந்தால், தன் தலையை வெளியே உயர்த்திக்காட்டும்; விரைந்து அதன் தலையைப் பற்றிக்கொண்டால், பரபரென்று சுற்றிக்கொள்ளும். உலகிற் பிளவுபட்ட நாக்கும் அதற்கு உண்டாம்.

எள்:

  • ஆடிக்குடத்து அடையும் – செக்கிலே ஆடி, எண்ணெயாகிக் குடத்திலே அடைந்திருக்கும்.
  • ஆடும்போதே இரையும் – செக்கிலே ஆடும்பொழுதிலேயே இரைச்சல் செய்யும்.
  • மூடித்திறக்கின் முகம் காட்டும் – குடத்து எண்ணெயை மூடி வைத்திருந்து பின் திறந்து பார்த்தால், பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும்.
  • ஓடி மண்டை பற்றில் பரபரெனும் – விரைய மண்டையிலேயே தேய்த்துக்கொண்டால், பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும்.
  • பாரிற் பிண்ணாக்கும் உண்டாம் – உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும்.
  • உற்றிடு பாம்பு எள்எனவே ஓது – (இதனால்) அடைந்திடும் பாம்பும் எள்ளும் சமமாகும் என்று சொல்லுக.

செக்கிலே ஆடி, எண்ணெயாகிக் குடத்திலே அடைந்திருக்கும்; செக்கிலே ஆடும்பொழுதிலேயே இரைச்சல் செய்யும்; விரைய மண்டையிலேயே தேய்த்துக்கொண்டால், பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும்; உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும்; (இதனால்) அடைந்திடும் பாம்பும் எள்ளும் சமமாகும் என்று சொல்லுக.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.