மனிதர்களுக்கு வழிகாட்டிகளாகும் நாய்கள்!

Guide Dogs

நாய்கள் மனிதனுக்கு வழிகாட்டியாக செயல்பட முடியுமா? ஆம்! முடியும் என்கிறது அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பால்மெட்டோ (Palmetto, Florida, USA) நகரில் உள்ள தென்கிழக்கு வழிகாட்டி நாய்கள் (SouthEastern Guide Dogs) என்ற நிறுவனம். இந்த நிறுவனம், மனிதனின் சிறந்த நண்பர்களான, நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் மற்றும் போரில் பார்வையிழந்த படை வீரர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வைக்கிறது. இந்தக் கட்டுரையில், இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அழகிய, மனதைக் கொள்ளைக் கொள்ளும் அனிமேஷன் வீடியோவும், இந்த நிறுவனைத்தைப் பற்றிய சுவையான தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

பார்வையற்றோருக்கு உதவ வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுக்காக 1982-ஆம் ஆண்டு ஒரு சிறிய பண்ணை வீட்டில் ஒரே ஒரு பயிற்சியாளர், மற்றும் மூன்றே பயிற்சி பெறும் நாய்களுடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்நிறுவனம், ஃப்ளோரிடாவின் பால்மெட்டோ (Palmetto, Florida, USA) நகரில் 6 உயர் தர பிரிவுகளாக, 100,000 சதுர அடியில், 33 ஏக்கரில் அழகிய சூழலில் அமைந்துள்ளது.

Guide Dogs

1982-ஆம் ஆண்டிலிருந்து, இதுவரை, 3100 வழிகாட்டி நாய்களை உருவாக்கியுள்ள தென்கிழக்கு வழிகாட்டி நாய்கள் நிறுவனம் (SouthEastern Guide Dogs), 1000 நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த லாபமற்ற நிறுவனம் (Non-Profit Organization), நாய்களுக்கு வழிகாட்டும் பயிற்சி அளித்து முடித்தவுடன், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு வழிகாட்டி உதவுவதற்காக, அவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி பெற்ற நாய்களைத் தத்துக் கொடுத்து விடுகிறது.

இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மெய்சிலிர்க்க வைக்கும் சிறிய, அழகிய அனிமேஷன் வீடியோவைப் பாருங்கள்; நாய்கள் நம் வாழ்க்கையை எப்படி மேம்படுத்துகின்றன என்பது நன்கு புரியும்; இந்தக் குறும் படத்தில் இடம் பெறும் பிப் (Pip) என்ற நாய்க்குட்டியின் அறிவுக்கூர்மையும், அதன் ஊக்கமும், அதன் உதவும் குணமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும், துன்பத்தில் இருக்கும்போது அந்த நாய்க்குட்டி ஒருதுளி கண்ணீர் விடும் காட்சி, நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறது.

தென்கிழக்கு வழிகாட்டி நாய்கள் நிறுவனத்திற்கு (SouthEastern Guide Dogs) தன்னார்வலர்கள் பலரும் பலவிதங்களில் உதவிவருகின்றனர். பலர் நிதியுதவி செய்கின்றனர்; தன்னார்வலர்கள் பலர் நாய்க்குட்டிகளை இந்நிறுவனத்திடமிருந்து பெற்று, வளர்த்து பின்னர் இந்த நிறுவனத்திடம் திருப்பிக் கொடுக்கின்றனர். பயிற்சி கொடுத்து முடித்தவுடன் இந்நிறுவனம் பார்வையற்ற மக்கள் மற்றும், போரில் பார்வையிழந்த அமெரிக்கப் படை வீரர்களுக்கு, நாய்களைக் கொடையளிக்கின்றனர். பின்னர் பயிற்சி பெற்ற நாய்கள் மனிதர்களுக்கு வாழ்நாள் முழுதும் வழிகாட்டிகளாகவும், பார்வையற்றோருக்கு கண்களாகவும் இருக்கின்றன.

தென்கிழக்கு வழிகாட்டி நாய்கள் நிறுவனம் (SouthEastern Guide Dogs) பற்றிய சிறிய விளக்க வீடியோ இதோ:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.