குருவிரொட்டி இணைய இதழ்

தனிமம் (Element) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்!

தனிமம் (Element) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்!

அறிவியலில் தனிமம் (Element) என்பது தனித்த தன்மையுடைய ஒரு பொருளைக் குறிக்கும். தனித்தன்மை என்பது அப்பொருளுக்கு மட்டுமே உள்ள தனி இயல்புகளைக் குறிப்பதாகும்.

எடுத்துக்காட்டாக, இரும்பு மற்றும் தங்கத்தை ஒப்பிட்டால், இரும்பு எளிதில் துருப்பிடிக்கும். ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தங்கத்தின் நிறமும் குணமும் மாறுவதில்லை.

அதே வேளையில், இரும்பின் வலிமை தங்கத்தின் வலிமையை விட மிக அதிகம்.

இவ்வாறு ஒவ்வொரு பொருளும், அவற்றின் அடிப்படை இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளின் அடிப்படையில், வெவ்வேறு தனிமங்களாகின்றன.

தனிமத்தின் நிலைகள்

பொதுவாக, ஒரு தனிமமாக உள்ள ஒரு பருப்பொருள், இரும்பு போன்ற திடப்பொருளாகவோ, அல்லது பாதரசம் போன்ற நீர்மமாகவோ அல்லது ஆக்சிஜன் போன்ற வாயுப்பொருளாகவோ இருக்கும்.

தனிமம் என்பது ஒரு தனிப்பொருள். அதில் ஒரு குறிப்பிட்ட பொருள் மட்டும் இருக்கும். அப்பொருளை அதற்கு மேல் தனியாகப் பிரிக்க முடியாது.

சில பொருட்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் வேதிவினை புரிந்து இணைவதால் உருவாகியிருக்கும். எடுத்துக்காட்டாக, நீர் எனும் ஒரு பருப்பொருள் (Matter), ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகிய இரண்டு தனிமங்களும் சேர்ந்த ஒன்று. நீரிலிருந்து ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் தனித்தனியே பிரித்து எடுத்து விட்டால், இரண்டு தனிப்பட்ட தனிமங்கள் (அல்லது பருப்பொருள்) கிடைக்கும். அதற்கு மேல் அவற்றைப் பிரித்து எடுக்க முடியாது.

சேர்மம் – நீர் மூலக்கூறு (இதில் ஹைட்ரஜன் & ஆக்சிஜன் என இரு தனிமங்கள் சேர்ந்துள்ளன)

ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிப்பது, அதன் அடிப்படைத்துகளான அணுவாகும்.

மறுதலையாகக் கூறினால், ஒரு குறிப்பிட்ட தனிமம் பெற்றிருக்கும் அதன் இயல்பு, அதன் அடிப்படைத் துகளான ஒவ்வொரு அணுவுக்கும் பொருந்தும். அதாவது, ஒரு தூய பெரிய இரும்புப் பாறை பெற்றிருக்கும் அதன் குணங்களை, அதிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒவ்வொரு சிறிய துண்டும் அல்லது துகளும் பெற்றிருக்கும். அதே இயல்புதான் அதன் அடிப்படைத்துகளான அணுவுக்கும் இருக்கும்.

நாம் அன்றாட வாழ்வில் பல தனிமங்களைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, இரும்பு எல்லாப் பயன்பாடுகளிலும் உள்ளது. ஒரு சிறிய ஆணி முதல் உலகின் மிகப்பெரிய கட்டடம், பாலம், கப்பல் வரை இரும்பு நமக்குப் பெரிதும் பயன்படுகிறது. சில பயன்பாடுகளில் தனியாகவோ, பல பயன்பாடுகளில் சேர்மமாகவோ அல்லது கலவையாகவோ தனிமங்கள் பங்கு வகிக்கின்றன.

அதுபோல, அலுமினியம் உணவு சமைக்கப்பயன்படும் பாத்திரங்களை உருவாக்குவதிலிருந்து, மிகப்பெரிய வானூர்திகளை (Aeroplanes) உருவாக்குவது வரை பல பயன்பாடுகளில் நமக்கு உதவுகிறது.

நாம் பொதுவாக அறிந்த அல்லது கேள்விப்படும் அல்லது பயன்படுத்தும் தனிமங்களில் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

இதுவரை பூமியில் 118 தனிமங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 94 இயற்கைத் தனிமங்கள்; மற்றவை ஆய்வகங்களில் செயற்காக உருவாக்கபட்டவை.

கீழ்க்கண்ட இணைப்பில் அனைத்து தனிமங்களின் தனிம வரிசை அட்டவணையைக் காணலாம்:

IUPAC வெளியிட்டுள்ள அனைத்து தனிமங்களின் பட்டியல்