குருவிரொட்டி இணைய இதழ்

பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன?

பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன?

பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகள் நிலநடுக்கோட்டுப் பகுதியை விட மிகவும் குளிர்ச்சியாகவும், பனிப்பகுதியாகவும் காணப்படுவது ஏன் என்பது பற்றி இந்தப் பகுதியில் காண்போம்.

சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் செங்குத்தாக விழுகின்றன. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் ஒளி விழுகிறது. இது, சூரியவெப்ப ஆற்றலை அதிக அளவில் இப்பகுதிக்குக் கடத்த வழிவகுக்கிறது.

பூமி தன் அச்சைப் பொறுத்து 23.5 கோண அளவில் சாய்ந்து உள்ளது. இதனால், வட மற்றும் தென் தெருவப்பகுதிகளின் மீது விழும் சூரியனின் ஒளியளவு குறைவாக உள்ளது. இதன் விளைவாக, இப்பகுதிகளில் குறைவான அளவே வெப்ப ஆற்றல் கடத்தப்படுகிறது. ஆண்டு முழுவதும், இவ்வாறு வெப்பத்தின் அளவு குறைவாக இருப்பதால், துருவப்பகுதிகள் மிகவும் குளிர்ச்சியாகவும், இப்பகுதிகளில் உள்ள கடல் நீர் உறைந்து பனிப்பகுதியாகவும் காணப்படுகிறது

மேலும், துருவப்பகுதிகளில் உள்ள வெண்ணிற பனிப்பாறைகள் சூரிய ஒளியை எதிரொளித்து விடுகின்றன. ஆனால், நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள நிலப்பகுதியானது சூரிய ஒளியை அப்படியே உள்வாங்கிக் கொள்வதால், இப்பகுதி வெப்பமாக உள்ளது.

பூமியை நெருங்கும் சூரிய ஒளியானது, சாய்வாக உள்ள துருவப்பகுதியை அடையும் தொலைவு, நிலநடுக்கோட்டுப் பகுதியை அடையும் தொலைவை விட அதிகமாக இருப்பதால், அதிக அளவு வளிமண்டலத் துகள்களைக் கடந்து வருகிறது. இத்துகள்கள், ஒளிக்கதிர்கள் துருவப்பகுதியை அடையும் முன், அவற்றில் பெரும்பகுதியை சிதறடித்தும், உள்வாங்கியும் கொள்கின்றன. இதனால் துருவப்பகுதியை குறைவான வெப்ப ஆற்றலே சென்றடைகிறது.