குருவிரொட்டி இணைய இதழ்

உணவூட்டம் (Nutrition) – ஆற்றல் – கலோரி என்றால் என்ன?


உணவூட்டம் (Nutrition) – ஆற்றல் தேவைகள் – கலோரி – உடல்நலம் – Energy Needs – Calorie – Health

ஆற்றல் (Energy) என்றால் என்ன? ஆற்றல் என்ற சொல்லிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளது! நாம் நம் பணியை செம்மையாக ஆற்றத் தேவையான திறன் ஆற்றல் (Energy) எனப்படும். இந்தப் பகுதியில் ஆற்றல், கலோரி ஆகியவை பற்றி பார்ப்போம். அதற்கு முன் உணவூட்டம் (Nutrition) பற்றி கொஞ்சம் பார்ப்போம்.


உணவூட்டம் (Nutrition)

உணவூட்டம் (Nutrition) என்பது உணவு, அதில் அடங்கியுள்ள உணவுக்கூறுகள், மற்றும் அவை நம் உடல்நலத்திற்குத் தரும் நன்மைகள் ஆகியவற்றிப் பற்றிய அறிவியலே ஆகும். இதைப்பற்றிய அடிப்படை அறிவியலை நாம் தெரிந்துகொள்வதால், எந்த வகை உணவை, எப்படி, எப்போது, எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்று நம்மால் அறிய முடியும். இது நமக்கு வரும் நோய்களிலிருந்து வருமுன் நம்மை நாமே காத்துக்கொள்வதற்கு வழி வகுக்கும்.


ஆற்றல் (Energy)

நாம் எந்த வேலையைச் செய்வதற்கும் நம் உடலுக்கு அதற்குத் தகுந்த ஆற்றல் வேண்டும்.

இப்படி எந்த ஒரு செயலைச் செய்யவும் நம் உடலுக்கு அதற்கேற்றவாறு ஆற்றல் இன்றியமையாதது.

சரி! இந்த ஆற்றல் நமக்கு எப்படி கிடைக்கிறது? ஆம். நாம் உண்ணும் உணவிலிருந்துதான்!

நாம் உண்ணும் உணவு வகைகள் மற்றும் அளவைப் பொறுத்து நமது ஆற்றல் அமையும். நமக்கு எவ்வளவு ஆற்றல் தேவை என்பது நாம் செய்யும் செயலைப் பொறுத்தது. மேலும், நம் வயது, பாலினம், உடல் அளவு, ஆகியவற்றை பொறுத்தும் ஆற்றல் அமையும்.

நாம் உட்கொள்ளும் உணவுகளில் அடங்கியுள்ள உணவுக்கூறுகளான கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates), புரதங்கள் (Proteins), மற்றும் கொழுப்புகள் (Fats), நம் உடலில் கரைந்து நமக்குத் தேவையான ஆற்றலை வெளியிடுகின்றன. நாம் இடம் பெயரவும், வேலைகளைச் செய்யவும், நம் உடல் வளர்ச்சிக்கும் இவை உதவுகின்றன. மேலும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Vitamins), மற்றும் கனிமங்கள் (Minerals) நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தருகின்றன.

இந்த உணவுக்கூறுகள் வெவ்வேறு உணவு வகைகளில் வெவ்வேறு விகிதங்களில் இருக்கும். அதாவது, தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருப்புகள், கொட்டைகள், காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றுள் உணவுக்கூறுகள் பல்வேறு விகிதங்களில் அடங்கியுள்ளன.


கலோரி (Calorie)

நமக்கு எவ்வளவு ஆற்றல் வேண்டுமென்பதைக் கணக்கிட ஒரு அளவு முறை வேண்டும். அந்த அளவுமுறைப்படி பயன்படுத்தப்படும் அலகுதான் கலோரி.

பொதுவாக 1 கலோரி என்பது மிகச்சிறிய அளவு என்பதால், கலோரியை ஆயிரங்களில் குறிப்பிடுவது வழக்கம். அதாவது, கிலோகலோரிகள் (Kilo Calories – kcal).

உதாரணமாக, ரொட்டி போன்ற உணவுப்பொருட்கள் அடங்கிய பொட்டலங்களின் உறைகளில் உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் (கிராம் அல்லது மில்லி கிராம்) மற்றும் ஆற்றல் அளவு (கிலோகலோரிகள் – kcal) ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். உணவுக்கட்டுப்பாடுடன் இருப்பவர்களுக்கு இந்த ஆற்றல் அளவு (கிலோகலோரிகள் – kcal) பற்றிய விவரம் உதவியாக இருக்கும்.

உணவூட்டம் பற்றி, அதாவது, நம் உணவில் உள்ள உணவுக்கூறுகள் பற்றியும் அவை உடல்நலத்திற்கு ஆற்றும் முக்கிய பங்குகள் பற்றியும் இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்!