குருவிரொட்டி இணைய இதழ்

இரும்பு எப்படித் துரு பிடிக்கிறது? (How does Iron get rusted?) – அறிவியல் அறிவோம்!

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
இரும்பு - துரு (Rust)

ஏன்? எப்படி? – இரும்பு எப்படித் துரு பிடிக்கிறது? (How does Iron get rusted?)

இரும்பு அல்லது எஃகுப் பொருட்கள் துருப் பிடிக்கக் கூடியவை என்பது நமக்குத் தெரியும். சரி! அவை எப்படித் துருப் பிடிக்கின்றன என்பதை இந்த “ஏன்? எப்படி?” பகுதியில் தெரிந்து கொள்வோம்!

ஆணிகள், நாற்காலிகள், மேசைகள், சன்னல்கள், கதவுகள் போன்ற இரும்புப் பொருட்களின் மீது, நீர் பட்டு, ஈரமாக சில நாட்கள் இருக்கும்போது அல்லது மழைக் காலங்களில் ஈரக்காற்றில் சில நாட்கள் இருக்கும்போது துருப் பிடிக்கின்றன.

இதற்குக் காரணம், இரும்பு, ஈரக்காற்றில் இருக்கும் நீர் மற்றும் ஆக்சிஜனுடன் வேதி வினைபுரிந்து ஒரு மாறுபட்ட புதிய சேர்மமாக மாறுவதால் தான்.

இதில் இரும்பு மற்றும் ஆக்சிஜன் ஆகியவை தனிமங்கள்; நீரானது ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்த ஒரு சேர்மம். இவை மூன்றும் வேதிவினை புரிந்து நீரேற்றம் பெற்ற இரும்பு (III) ஆக்சைடு எனும் சேர்மமாக மாறுகிறது. இதுவே, பழுப்பு (பிரௌன்) நிறத்தில் நாம் பார்க்கும் துருவாகும்.

இந்தத் துரு, இரும்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளாகும். இதற்கு, இரும்பிற்குரிய எந்த தனிப்பட்ட இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகளும் கிடையாது.

எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய காந்தத்தை இரும்பினால் (அல்லது எஃகு) ஆன, ஒரு பொருளுக்கு (நாற்காலி) அருகில் கொண்டு சென்றால், அந்த காந்தம் ஈர்க்கப்பட்டு விடும்.

ஆனால், அதே சிறிய காந்தத்திற்கு அருகே இரும்புப் பொருளின் துருத் துகள்களைக் கொண்டு சென்றால், அவை ஈர்க்கப்படாது. ஏனெனில், துருவுக்கு இரும்பின் இயல்பு இல்லை. அது ஒரு முற்றிலும் மாறுபட்ட பொருள்.

ஒரு இரும்புப் பொருளில் துருப் பிடிக்கும் நிகழ்வு மேலும் மேலும் தொடர்ந்து நடைபெறும்போது, இரும்பு அரிக்கப்பட்டு (Corrosion), அப்பொருள் சேதமடைந்து விடும். இந்த சேதமானது, பொருளில் ஒரு பகுதியிலோ, முற்றிலுமோ ஏற்படக்கூடும்.

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link