குருவிரொட்டி இணைய இதழ்

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் – குறள்: 705


குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
– குறள்: 705

– அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி
விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத
கண்கள் இருந்தும் என்ன பயன்?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர் முகத்திலும் முகவுறுப்புகளிலுமுள்ள குறிப்புகளைக் கண்டும் அவற்றால் அவர் உள்ளக் குறிப்புக்களைக் காணமாட்டாதனவாயின்;ஒவ்வொரு புலனுக்கும் ஒவ்வொன்றாகவுள்ள ஐம்புல வுறுப்புகளுள், காட்சியையே தம் புலனாகக் கொண்ட கண்கள் வேறென்ன பயன்படுவனவாம்?



மு. வரதராசனார் உரை

(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புக்களுள் கண்கள் என்ன பயன்படும்?



G.U. Pope’s Translation

By sign who knows not signs to comprehend, what again,
‘Mid all his members, from his eyes does he obtain?

 – Thirukkural: 705, The Knowledge of Indication, Wealth