குருவிரொட்டி இணைய இதழ்

விடுமுறைக்காலக் கொண்டாட்டம் (Animated Videos for Holidays)

விடுமுறைக்கால பொழுதுபோக்கு காட்சிகள் (Videos for Holidays)

பள்ளி விடுமுறையில் இருக்கும் சிறுவர் சிறுமியரே, உங்கள் விடுமுறைப் பொழுதைக் கழிக்க, இதோ உங்களுக்காக சில அருமையான யூட்யூப் வீடியோக்கள்; தென் ஆப்ரிக்காவின் சன்ரைஸ் நிறுவனம் (Sunrise Productions) அனைவரும் ரசிக்கத்தக்கப் பல அரிய அனிமேஷன்களை உருவாக்குகிறது. இந்நிறுவனம் ஜங்கிள் பீட் Jungle Beat என்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடரை உருவாக்கி வழங்கி வருகிறது.

இந்தத் தொலைக் காட்சித் தொடரில் வரும் கதைகள், அவற்றில் இடம் பெறும் விலங்குகள் செய்யும் குறும்புகள், அவை போடும் கும்மாளங்கள், அதற்கேற்ற பிண்ணனி இசை; இவை அனைத்தும் சிறுவர்களை மட்டும் அல்ல, பெரியவர்களையும் வயிறு குலுங்க சிரிக்கச் செய்துவிடும். அது மட்டுமல்ல; இந்தக் கதைகளில் வரும் விலங்குகள் அவற்றின் நண்பர்களுடன் ஒற்றுமையாக இருப்பதையும், அவற்றின் கொண்டாட்டங்களையும், அந்த விலங்குகள், தாம் சந்திக்கும் சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றிகொள்வதையும், மிகவும் நகைச்சுவையாகவும், அழகாகவும் சன்ரைஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உதாரணத்துக்கு, ஒரு மான், அதன் தோழிக்கு ஒரு பூ எடுத்து வர அது படும் பாட்டையும், அதை அந்த மான் எதிர்கொள்ளும் விதத்தையும் பாருங்கள்! ஒரு மானுக்கு ஒரே நாள்ல எத்தனை கண்டம் பாருங்க! இந்த வீடியோவை அவ்வளவு அழகாகவும், நகைச்சுவையோடும் உருவாக்கியுள்ளனர்.

அந்த மானின் வீடியோ ஒரு 5 நிமிட சிறிய உதாரணம் தான். அடுத்து கீழே உள்ள வீடியோ ஒரு மணி நேர வீடியோ. இதில் யானை தன் உணவுக்காக செய்யும் கூத்து, பச்சோந்தி வானவில்லில் நுழைந்து நிறம் பெறுவது, மின்மினிப் பூச்சி செய்யும் குறும்புகள், தேங்காயை வைத்துக் கொண்டு குரங்கு படும் பாடு, படுசுட்டித் தேனீ, பறக்கத் துடிக்கும் ஆஸ்ட்ரிச், மற்றும் ஒட்டகச்சிவிங்கி, எறும்பு, தவளை, காட்டுப்பன்றி ஆகியவை சந்திக்கும் இன்னல்களைம், அவற்றிலிருந்து அவை வெற்றி பெற மேற்கொள்ளும் முயற்சிகளையும், வியக்கத்தக்க கற்பனைத் திறனுடன் உருவாக்கியுள்ளனர்.

குரங்கும் யானையும் போடும் கும்மாளத்தைக் கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம்.

குறிப்பு: பொதுவாக, யூட்யூப் காட்சிகளை, அலைபேசியைக் கொண்டு குழந்தைகளுக்கு காட்டாமல், அலைபேசியைத் தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து அதன் மூலம் ஒளிபரப்பச் செய்து காட்டவும். குழந்தைகள், தனியாக அலைபேசி பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டாம். பெரியவர்களின் கண்காணிப்பிலேயே குழந்தைகள் எப்போதும் வீடியோ / தொலைக்காட்சி பார்ப்பது நல்லது.