குருவிரொட்டி இணைய இதழ்

பல்லவை கற்றும் பயம்இலரே – குறள்: 728


பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
– குறள்: 728

– அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும்
அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம்கற்ற நல்ல பொருள்களை நல்லறிஞர் இருந்த அவைக்கண் தாம் கொண்ட அச்சத்தினால் அவர்க்கு விளங்குமாறு எடுத்துச் சொல்லும் ஆற்றலில்லாதார்; பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே யாவர்.



மு. வரதராசனார் உரை

நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.



G.U. Pope’s Translation

Though many things they’ve learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.

 – Thirukkural: 728, Not to dread the Council, Wealth