குருவிரொட்டி இணைய இதழ்

நாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது? – தமிழகம் – ஊரும் பேரும் – ரா.பி. சேது – பகுதி – 1


நாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது? – தமிழகம் – ஊரும் பேரும் – ரா.பி. சேது – பகுதி – 1

நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த முறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. அந் நாடு மூன்று பாகமாகிய பொழுது ஒவ்வொரு பாகமும் தனித்தனியே நாடு என்னும் பெயருக்கு நாடு உரியதாயிற்று. சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என்ற பெயர்கள் தமிழிலக்கியத்தில் மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். நாளடைவில் முந் நாடுகளின் உட்பிரிவுகளும் நாடு என்று அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு முதலியன இதற்குச் சான்றாகும்.

சிறுபான்மையாகச் சில தனியூர்களும் நாடென்று பெயர் பெற்று வழங்குதல் உண்டு. முன்னாளில் முரப்பு நாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறு கரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்ல நாடு என்னும் பெயருடையது. இங்ஙனம் நாடு என்னும் சொல் ஊரைக் குறிக்கும் முறையினைச் சோழ நாட்டிலும் காணலாம். மாயவரத்திற்கு அணித்தாகவுள்ள ஓரூர் கொரநாடு என்று அழைக்கப்படுகிறது. கூறை நாடு என்பதே கொரநாடென மருவிற்று. பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும், மதுராந்தக வட்டத்தில் தொன்னாடும் உள்ளன. நாடென்னும் சொல்லின் பொருள் வழக்காற்றில் நலிவற்ற தன்மையை இவ்வூர்ப் பெயர்கள் உணர்த்துவனவாகும்.

நூல்: தமிழகம் – ஊரும் பேரும் – ரா.பி. சேது