குருவிரொட்டி இணைய இதழ்

முழு எண்ணெய்க் கத்திரிக்காய்க் குழம்பு – செய்முறை – Whole Brinjal Gravy – Recipe

 

முழு எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:

  1. சிறிய அளவுள்ள கத்திரிக்காய்கள் = 300 கிராம்
  2. பெரிய வெங்காயம் = 2
  3. தக்காளி = 3
  4. முழு பூண்டு = 2
  5. புளி = ஒரு எலுமிச்சம் பழம் அளவுக்கு சமமான அளவு
  6. சமையல் எண்ணெய் = 150 மி.லி.
  7. மிளகாய்த் தூள் (தனியா சேர்த்து அரைத்தது) = 50 கிராம்
  8. மிளகு தூள் = 1 சிட்டிகை
  9. சீரகம் = 1/4 மேசைக்கரண்டி (Table Spoon)
  10. மஞ்சள் தூள் = 1/4 மேசைக்கரண்டி (Table Spoon)
  11. வெந்தயத் தூள் = 1 மேசைக்கரண்டி (Table Spoon)
  12. பெருங்காயத் தூள் = சிறிதளவு
  13. உப்பு = தேவையான அளவு
  14. கடுகு = சிறிதளவு
  15. கொத்தமல்லி தழை, கறி வேப்பிலை = தேவையான அளவு

 

செய்முறை:

  1. பூண்டை உரித்துப் பற்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இவற்றைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  2. முழுக் கத்திரிக்காயை நான்கு கீறல்களாக வகிர்ந்து எடுக்கவும். சிறு துண்டுகளாக வெட்டக் கூடாது.
  3. மிளகாய்த் தூளுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். வகிர்ந்து வைத்த கத்திரிக்காயை, பிசைந்த மிளகாய்த் தூளில் அமுக்கி சிறிது நேரம் வைக்கவும்.
  4. அடுப்பைப் பற்ற வைத்து, பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றவும்.
  5. எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். எண்ணெயில் கடுகு வெடித்தவுடன், அதில் கறிவேப்பிலையைப் போடவும். பிறகு, பூண்டை அதில் போட்டு, நன்றாக வதக்கவும். பூண்டு பொன்னிறமாக வந்தவுடன், எண்ணெயில் வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.
  6. அடுப்பை மெதுவாக எரிய விடவும்.  வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் எண்ணெயில் தக்காளியையும் போட்டு நன்றாக வதக்கவும்.
  7. எல்லாம் நன்றாக வதங்கியவுடன், மிளகாய்த்தூளில் ஊறிய கத்திரிக்காயை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
  8. கத்திரிக்காய் வதங்கியதும், புளியைக் கரைத்து அதில் ஊற்றவும். அதனுடன், மஞ்சள் தூள், சீரகத் தூள், வெந்தயத் தூள், மிளகுத் தூள், பெருங்காயத் தூள் எல்லாவற்றையும் சேர்த்து, நன்றாக கிளறி விடவும்.
  9. குழம்பு நன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து, அதில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளைத் தூவவும.

குறிப்பு: மிளகாய்த் தூளில் உப்பு கலந்து பிசைந்ததால், குழம்பில் உப்பு சேர்க்கத் தேவையில்லை. வேண்டுமெனில், சுவைத்துப் பார்த்து, உங்கள் தேவைக்கேற்ப மேலும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.