குருவிரொட்டி இணைய இதழ்

இசைஞானியும் மனயிசைவு ஒலியியல் ஆய்வும்: இசை = இளையராஜா = இசை (பகுதி-4) (The Maestro and The Psychoacoustic Analysis)

மனயிசைவு ஒலியியல் ஆய்வு (Psychoacoustic Analysis)

இன்று (02-ஜூன்-2019) 76-வது பிறந்தநாள் காணும் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துகள் கூறி, தொடரும் அவரது இசைப்படைப்புகளுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தப் பகுதியில் இசைஞானியின் சிறப்புகளைப் பற்றியும், அவரது படைப்புகளில் சிலவற்றைப் பற்றியும் பார்ப்போம்.

மனயிசைவு ஒலியியல் ஆய்வு (Psychoacoustic Analysis) பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. எத்தகைய ஒலி அமைப்புகள் மற்றும் எந்த அளவிலான ஒலி வடிவங்கள் நம் செவி மற்றும் மூளையால் ஏற்கத் தகுந்தவை என்பது பற்றிய ஆராய்ச்சியே மனதிற்கேற்ற ஒலியியல் ஆய்வு (Psychoacoustic Analysis) எனப்படும். இதை மனயிசைவு செவிப்புலனியல் ஆய்வு என்றும் கூறலாம். இதனடிப்படையில் அமைந்த டிஜிட்டல் ஒலித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம் செவிப்புலனுக்கு ஒவ்வாத ஒலிவடிவங்களை அதாவது இரைச்சலை நீக்கித் துல்லியமான ஒலியமைப்பைப் பெறலாம். இப்படிப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பே, நம் செவிப்புலனுக்கேற்ற, மனதிற்கினிய, மிகத்துல்லியமான இசையை நமக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார் நம் இசைஞானி.

மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், எந்தவொரு இசை வடிவத்தை உள்ளீடாகக் கொடுத்து துல்லியமான ஒலியமைப்பைப் பெற்றாலும், அந்த இசையொலி நூறு சதவீதம் இனிமையாக இருக்கவேண்டுமானால், அது அடிப்படையிலேயே மனதிற்கு இசைவு உடையதாகவும், செவிகளுக்கு இனிமையானதாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நூறு சதவீத இனிமையான, மனதை வருடும் இசையை நமக்கு அள்ளி வழங்குபவர் தான் நம் இளையராஜா.

போன்ற மேற்கண்ட பல நுணுக்கங்களைச் சில நொடிப்பொழிதிலேயே கணித்து, இசையை உருவாக்கும் வல்லமை படைத்தவர் தான் நம் இசைஞானி.

உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் பல ஆண்டுகளாகச் செய்யும் மனயிசைவு ஒலியியல் ஆய்வை (Psychoacoustic Analysis) தனி மனிதராக நிகழ்த்திச் சாதித்துக்காட்டியிருக்கிறார் இளையராஜா. இதற்குச் சான்றாகத்தான், உலகெங்கும் பல தலைமுறைகளைத் தாண்டி பல ரசிகர்களின் மனதை அவர் கொள்ளை கொண்டிருக்கிறார். நாம் இசையொலியை நம் செவிகளால் கேட்கிறோம். ஆனால், இசைஞானி, ஒலி (Sound) வடிவத்தை, ஒளி (Light) வடிவமாகவும் பல பரிமாணங்களில் கண்முண்ணே உருவம் கொடுத்து / காட்சிப்படுத்திப் (Visualization) பார்க்கிறார். இதிலிருந்து ஒன்றை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். நம் இளையராஜா இசைஞானி மட்டும் அல்ல; அவர் ஓர் அறிவியல் ஞானியும் தான் என்று.

நம் இசைஞானியின் இசைக்கென ஒரு பல்கலைக்கழகம் அமைத்து, அவரது இசையை, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்த்தால், உலகத் தரமான இசை உலகெங்கும் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

உலகின் பல்வேறு சிறந்த இசைத் தொகுப்புகளை / பாடல்களை நீண்ட நேரம் அமைதியுடன் பொறுமையாகக் கேட்டு விட்டுப் பிறகு, இறுதியில், நம் இசைஞானியின் இசையைக் கேட்டுப் பாருங்கள். நம் இன்னிசை ஞானியின் இசை தரும் மன அமைதியையும், மன நிறைவையும் வேறு எந்த இசைத் தொகுப்பும் கொடுக்கவில்லை என்பதை நன்கு உணர்வீர்கள்!

நம் திரையுலக இசையை, இளையராஜாவின் வருகைக்கு முன்; இளையராஜாவின் வருகைக்குப் பின் என்று, இரண்டு கால கட்டமாகப் பிரிக்கலாம். அல்லது அன்னக்கிளிக்கு முன்; அன்னக்கிளிக்குப் பின் என்றும் இரண்டு இசைக்காலக் கட்டங்களாகப் பிரிக்கலாம்;

1976-ல் வெளியான அன்னக்கிளியின் பாடல்களை மேஸ்ட்ரோவின் இசைச் செயலியில் (மேஸ்ட்ரோஸ் மியூசிக் ஆப்) கேட்டுப்பாருங்கள். அன்றைய கால கட்டத்திற்குக் கொஞ்சம் பின்னோக்கி சென்று கற்பனை செய்து பாருங்கள்; அன்றைய சூழலில், இந்தப் படத்தின் பாடல்கள் எப்படிப்பட்ட இசைப் புரட்சியை உருவாகியிருக்கும் என்பது நன்றாகப் புரியும்! 43 ஆண்டுகளாகியும் இன்னும் இந்தப் பாடல் இளமையாகவும், புதுமையாகாவும் இருப்பதை உணரலாம்!

குருவிரொட்டியின் “இசை=இளையராஜா=இசை” -ன் இதற்கு முந்தைய மூன்று பகுதிகளில் (பகுதி-1, பகுதி-2, பகுதி-3) , பார்த்தது போல் இனிவரும் பகுதிகளில் அன்னக்கிளிக்குப் பிறகு வெளிவந்த மற்ற இசை வடிவங்களைப் பற்றிப் பார்ப்போம் (தொடரும்…).