குருவிரொட்டி இணைய இதழ்

63 வயது மகனைப் பேணிக்காக்கும் 96 வயது விக்டர் கொவெவா (Victor Coella) – மூத்த குடிமகனின் அருஞ்செயலைக் கேட்டு நெகிழ்ந்த நீதியரசர்

63 வயது மகனைப் பேணிக்காக்கும் 96 வயது விக்டர் கொவெவா (Victor Coella)

அமெரிக்காவின் 96 வயது மூத்த குடிமகனான விக்டர் கொவெவா (Victor Coella) வாகனத்தை மிக வேகமாக ஓட்டிய வழக்கில் நீதிமன்றம் வந்தார். அமெரிக்காவின் ரோட் தீவின் ப்ராவிடென்ஸ் நகரில் உள்ள நகராட்சி நீதிமன்றத்திற்கு வந்த அவரை விசாரித்தார் நீதியரசர் ஃப்ரான்க் கேப்ரியோ. அப்போது கொவெவாவிடம், நீதியரசர் பள்ளிக்கூடம் இருக்கும் பகுதியில் வாகனத்தை மிக வேகமாக ஓட்டிய குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த கொவெவா, தனக்கு 96 வயது ஆகிறது; எல்லை மீறிய வேகத்தில் தான் வாகனம் ஓட்டுவதில்லை என்றும் தனக்கு தேவை இருக்கும்போது மட்டுமே வாகனம் ஓட்டுவதாகவும் கூறினார். மேலும், அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் கூறிய அவர், குற்றம் சாட்டப்பட்ட அன்று அவர் தன்னுடை மகனை இரத்தப் பரிசோதனைக்காக மருத்துமனைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றதாக விளக்கினார். இதைக் கேட்டு வியந்த நீதியரசர் ஃப்ரான்க் கேப்ரியோ, கொவெவாவின் மகனுக்கு என்ன வயதாகிறது என்று கேட்டார்.

அதற்கு, கொவெவா பதில் அளிக்கையில், அவருடைய மகனுக்கு 63 வயதாகிறது என்றும், அவரது மகன் ஒரு புற்றுநோயாளி என்றும் கூறினார். மேலும் இரு வாரங்களுக்கொரு முறை தனது மகனை, இரத்தப் பரிசோதனைக்காக மருதவரிடம் அழைத்துச் செல்வதாகவும் விளக்கினார்.

96 வயதில் இப்படிப்பட்ட அருஞ்செயலாற்றும் கொவெவாப் பார்த்து நெகிழ்ந்த நீதியரசர் ஃப்ரான்க் கேப்ரியோ அவரை வெகுவாகப் பாராட்டி அவரது வழக்கைத் தள்ளுபடி செய்தார். மனதை உருகவைக்கும் இந்த நீதிமன்றக்காட்சியைக் கீழ்க்கண்ட காணொளிக்காட்சியைச் சொடுக்கிப் பார்க்கவும்: