குருவிரொட்டி இணைய இதழ்

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க – குறள்: 655


எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று.
– குறள்: 655

– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

‘என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஐயோ! எத்தன்மையான தவற்றை எண்ணாது செய்து விட்டேன் என்று பின்பு வருந்துவதற் கேதுவான வினைகளை ஒருபோதுஞ் செய்யாதிருக்க; ஒருகால் தப்பித்தவறிச்செய்ய நேர்ந்து விடின்; அதன்பின்பாகிலும் அத்தகைய வினைகளைச் செய்யாதிருப்பது நல்லது.



மு. வரதராசனார் உரை

பிறகு நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்களைச் செய்யக்கூடாது. ஒருகால் தவறிச் செய்தாலும், மீண்டும் அத்தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.



G.U. Pope’s Translation

Do nought that soul repenting must deplore.
If thou hast sinned, ’tis well if thou dost sin no more.

 – Thirukkural: 655, Purity in Action, Wealth