குருவிரொட்டி இணைய இதழ்

கல்லா ஒருவன் தகைமை – குறள்: 405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வு படும்.
– குறள்: 405

– அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.



ஞா. தேவநேயப்பாவாணர் உரை

நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகத் தான் மதிக்கும் மதிப்பும், அவனை அங்ஙனம் பிறர் மதிக்கும் மதிப்பும் அவற்றைக் கற்றவன் அவனைக் கண்டு உரையாடும் போது கெட்டுப்போம்.



மு. வரதராசனார் உரை

கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.