குருவிரொட்டி இணைய இதழ்

குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2)


பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2)


தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird)

  • தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird) எனப்படும் பாடும் பறவை, உலகிலேயே மிகச்சிறிய பறவை.
  • ஆண் பறவைகள் சராசரியாக 5.5 செ.மீ (2.2 அங்குலம்) நீளமும், 1.95 கிராம் எடையும் கொண்டவை.
  • பெண் பறவைகள் சராசரியாக 6.1 செ.மீ (2.4 அங்குலம்) நீளமும் 2.6 கிராம் எடையும் கொண்டவை.

காண்டாமிருகம் (Rhinoceros)

  • நிலத்தில் வாழும் விலங்குகளில், யானைக்கு அடுத்தபடியாக மிக அதிக எடையுள்ள விலங்கு காண்டாமிருகம்.
  • காண்டாமிருகத்திற்கு கூர்மையான பார்வை கிடையாது. அதற்குப் பார்வைத்திறன் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால், அதற்குக் கேட்புத்திறனும், நுகரும் திறனும் மிக அதிகம்.

உலகின் அதிவேக மனிதர்கள்

உசைன் செயிண்ட் லியோ போல்ட்

  • ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த, உசைன் போல்ட், 2009 ஆம் ஆண்டு ஜெர்மெனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற 100மீ விரைவு ஓட்டத்திற்கான உலகத் தடகள போட்டியில் கலந்து கொண்டு 9.58 வினாடிகளில் 100 மீ தொலைவைக் கடந்து உலக சாதனை படைத்தார்.
  • அதே உலகத் தடகளப் போட்டியில் 200 மீ விரைவு ஓட்டத்திற்கான போட்டியில், 19.19 வினாடிகள் ஓடி உலக சாதனை படைத்தார்.
  • இந்த சாதனைகளை வேறெவரும் இன்னும் முறியடைக்காததால், உசைன் போல்ட் இன்னும் உலகின் அதிவேக மனிதராகத் திகழ்கிறார்.

ஃப்லாரென்ஸ் டெலாரெஸ் க்ரிஃப்த் ஜாய்னெர் – உலகின் அதிவேக பெண்மணி

அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்லாரென்ஸ் க்ரிஃப்த் ஜாய்னெர் 1988 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் இண்டியனாபொலிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ட்ரையல் போட்டிகளில் பெண்களுக்கான 100மீ விரைவு ஓட்டத்தில் கலந்துகொண்டு 10.49 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை.

ப்ளூட்டோ

2006-ஆம் ஆண்டு பன்னாட்டு வானியல் அமைப்பு (International Astronomical Union), ப்ளூட்டோ ஒரு கோள் அல்ல என அறிவித்தது. அந்த ஆண்டு முதல் சூரியனைச் சுற்றும் கோள்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து, எட்டானது.

யுரேனஸ்

யுரேனஸ் கோளின் சுழற்சி மற்ற கோள்களைப் போல் அதன் அச்சைப் பொருத்து இருப்பதில்லை. மாறாக, அது ஒரு பந்தை உருட்டி விட்டதுபோல் உருண்டுகொண்டே சூரியனைச் சுற்றி வருகிறது.

மனிதனின் இதயம்

மனிதனின் இதயம் சரசரியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் (1,00,000) முறைகளுக்கு மேல் துடிக்கிறது. உதாரணமாக, 60 வயதைக் கடந்த மனிதனின் இதயம் அதுவரை 60 ஆண்டுகளில் மொத்தம் 200 கோடி முறைகளுக்கு மேல் துடித்து இருக்கும்.

அப்படியென்றால், 100 வயது உடைய மனிதனின் இதயம் மொத்தம் சராசரியாக 350 கோடி முறைகளுக்கு மேல் துடித்து இருக்கும்.

சூரிய ஒளி

சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தூரம் 14.959787 கோடி கி.மீ. அதாவது, 14,95,97,870 கி.மீ (149.959787 மில்லியன் கி.மீ.).

இந்த தூரத்தை சூரியனின் ஒளி, நொடிக்கு 3 லட்சம் கி.மீ என்ற வேகத்தில் பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு, 8 நிமிடங்கள் மற்றும் 20 நொடிகள் (அதாவது, 500 நொடிகள்)

நன்னீர் (Freshwater)

பூமியில் உள்ள நீரில் 97.4% கடல் நீராக அதாவது உப்பு நீராக உள்ளது. மீதமுள்ள 3% -க்கும் குறைவான நீர் மட்டுமே நன்னீராக உள்ளது. அதிலும், 1.8% பனிப்பாறைகளாக உறைந்துள்ளது. இவை எல்லாம் போக, 0.78% நிலத்துக்கு அடியிலும், 0.02% குளங்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நன்னீர் உள்ள நீர் நிலைகளாகவும் கிடைக்கிறது.

இதன்மூலம், உலகில் நமக்கு கிடைக்கும் நன்னீரின் அளவு எந்த அளவுக்கு குறைவாக உள்ளது என்பதை நாம் அறியலாம்.